இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது: தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளையோர் பயன்பெறும் பொருட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தெரிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள், மாற்றுத்திறன் வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, புகைப்படத்துடன் டிச. 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகள் படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுவர். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் எவ்வித கட்டணமின்றி பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்கள், வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.