மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் முற்றிலும் அழியும் இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் ஆக்ரோஷ பேச்சு..

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டு ஆட்சி அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை போன்ற பல்வேறு சுதந்திரமான அமைப்புகளின் செயல்பாடுகள் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.

கறுப்பு பணம் மீட்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் டெபாசிட், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட எந்த ஒரு வாக்குறுதியையும் மோடி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இலங்கை அரசால் இழைக்கப்படும் அநீதிகள் தடுக்கப்பட்டு தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவர் என்ற வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்த துரோகம், வஞ்சகம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. காவிரி நதி நீர், நீட் நுழைவுத்தேர்வு, ஹட்ரோ கார்பன், மீத்தேன் வாயு எடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து துரோகம் விளைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவற்றை எதிர்ப்பதற்கு பதிலாக வஞ்சகம், துரோகத்திற்கும் துணை போகும் அரசாக தமிழக அரசு உள்ளது. மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போரிடும் அரசியல் போராட்டத்தில் திமுக., கூட்டணி வெல்லும்.

புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. சட்டமன்ற இடைத்தேர்தல் 18 தொகுதிகளிலும் எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும். 4 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் எங்கள் அணி போட்டியிட்டு அதிலும் வெற்றி பெறுவோம். இவ்விரு வெற்றி மூலம் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்படும். அந்த நிலை ஏற்படாது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நினைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 3,500 போராட்டங்களை சந்தித்துள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக தொடர்வதை மக்கள் விரும்பவில்லை என்றார்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!