543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்தமாக முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் வந்து விடுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து (இன்று பிற்பகல் 3 மணி) தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதால், அதன் பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகே அமலுக்கு வரும். தேர்தல் நடத்தை விதிகளினால் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் வந்துவிடுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய நடத்தை விதிகளை ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆட்சியில் இருக்கும் கட்சிகள், வாக்காளர்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள், நிதி உதவிகளை அறிவிப்பது, எந்தவிதமான வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தடை செய்யப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு, புதிய திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து கொண்டிருக்கிற திட்டங்களுக்கும் பொருந்தும்.
தேசியம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் திட்டங்களை அரசு அதிகாரிகள்தான் எந்தவொரு அரசியல் கட்சியினரின் சேர்க்கை இல்லாமல் செயல்படுத்த வேண்டும். ஆனால் அது, ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை கவரும் வகையில் இருந்துவிடக்கூடாது. இதில் மேலும் தெளிவு பெற தலைமை தேர்தல் அதிகாரிகளை அணுக வேண்டும்.
குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டு இருந்தாலும் அல்லது கவர்னர் உரையிலோ, பட்ஜெட் அறிக்கையிலோ அந்த திட்டம் இடம் பெற்றிருந்தாலும், அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, அந்தத் திட்டங்களை தொடங்கி வைக்கவோ, அறிவிக்கவோ கூடாது. அது வாக்காளர்களை கவரும் நடவடிக்கையாக அமைந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் குற்றமாகிவிடும்.
அரசின் திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவோ அனுமதி அளிக்கவோ கூடாது. அமலில் இருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் என்றாலும்கூட, அவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்யவோ செயல்படுத்தவோ கூடாது.
மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவோ அல்லது திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை அளிப்பது என்றாலுமோ தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது. (எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மேற்கொள்ளும் தொகுதி மேம்பாட்டுப் பணிகளும் அதில் அடங்கும்).
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பணிக்கான ஆணை வழங்கப்பட்டு இருந்தாலும், பணி தொடங்கியிருக்காத நிலையில் புதிதாக அந்தப் பணியை தொடங்கக் கூடாது. ஏற்கனவே பணி தொடங்கப்பட்டு இருந்தால் அதை தொடர்ந்து நடத்தலாம். பணி முடிந்ததும், அதிகாரிகள் திருப்தி அடைந்தால் அதற்கான பணத்தை விடுவிக்கலாம்.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான அவசர கால நிவாரணம் வழங்கும் திட்டங்கள், வயது முதிர்ந்தோருக்கான திட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு கூறாது. ஆனால் இதற்கான முன் அனுமதியை தேர்தல் கமிஷனிடம் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், அதை கவனத்தை ஈர்க்கும் விழாக்கள் மூலம் ஆட்சியில் உள்ள கட்சிகள் வழங்கக்கூடாது. இது மற்ற கட்சிகளை பாதிக்கும்.
அரசுத் திட்டங்களின் நிதியுதவியுடன் இயங்கும் தண்ணீர் லாரி, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், தேர்தல் முடியும்வரை மூடப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, அரசு திட்ட உதவிகளைப் பெறுவோரின் பெயரை தேர்வு செய்திருந்தார் அதை அவர்களுக்கு வழங்கலாம்.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளைக் கொண்டு, ஏற்கனவே பட்டியலிடப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கும் புதிய திட்டப் பணிகளை தொடங்கலாம். ஏற்கனவே முடிவுற்ற டெண்டர்களின்படி, தேர்தல் கமிஷனின் அனுமதிக்குப்பிறகு பணிகளை தொடங்கலாம். உலக அளவிலான டென்டர் கோரப்பட்டு இருந்தால் அவற்றை இறுதி செய்யலாம்.
பிரதமர், முதல்-அமைச்சர் நிவாரண நிதியை நேரடியாக பயனாளிகளுக்கு, தேர்தல் கமிஷனின் அனுமதி பெறாமல் வழங்கலாம். அரசு வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு மட்டும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரிகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ அழைத்து, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசக்கூடாது. மிகவும் அவசர நிலை என்றால், தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகி அனுமதி பெற்று பேச வேண்டும்.
எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, சாதி, மதம், இனம், மொழி தொடர்பான வேற்றுமைகளை பேசி மக்களிடையே கசப்பு உணர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது.
ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது. அவரது வீட்டு முன் பிரசாரக் கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
ஓட்டுக்காக சாதி, மத உணர்வை தூண்டக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் எதுவும், தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப் பொருள் கொடுக்கக் கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக் கூடாது.
தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது.
ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக் கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர், பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும். ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் அதை பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றிருந்தால், அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக் கூடாது. கொடும்பாவி பொம்மைகளை எரிக்கக்கூடாது.
தேர்தலின்போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், தற்காலிகமாக அதிகாரி யாரையும் ஆளும் அரசு நியமிக்கக்கூடாது. அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக்கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









