ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இரண்டு வயதான முதியவர்கள், தங்கள் பிள்ளைகள் ஏமாற்றி சொத்துக்களை வாங்கிவிட்டு தற்போது அந்த சொத்துக்களை விற்று சுகபோகம் அனுபவித்து வரும் நிலையில், தங்களை அனாதையாக விட்டு விட்டதாக வருத்தம் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேலும், சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாவா மனு கொடுத்திருந்தும், முறைகேடாக இது போன்று பல பத்திர பதிவுகள் நடைபெறுகிறது. அங்குள்ள அலுவலர்கள் தவறான மோசடி பேர்வழிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘மூக்கையூர்’ சாலையில் வசித்து வருபவர்கள் ராமசாமி – மாரியம்மாள் தம்பதியினர். இவர்கள் செல்வந்தராக வாழ்ந்து வந்த போது, தங்கள் சொத்துக்களை தங்களின் இரண்டு மகன்களுக்கு தானமாக செட்டில்மெண்ட் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இவர்கள் தற்போது வயது முதிர்ந்த காலத்தில், மகன்களால் கை விடப்பட்டநிலையில், பொருளாதார வசதியின்றி ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். குறிப்பாக இவர்களுடைய மூத்த மகன் ‘முருகன்’ என்பவர், பெற்றோர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை தன்னிச்சையாக விற்பனை செய்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இதனிடையே பெற்றோர்கள், மகன்களுக்கு தானம் கொடுத்த சொத்துக்களை, ‘மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் 2007 அத்தியாயம் 5 பிரிவு 23(i) ன் படி இனாம் செட்டில்மெண்டை ரத்து செய்யுமாறு பரமக்குடி கோட்டாட்சியருக்கு மனு செய்துள்ள நிலையில், இவர்களுடைய மூத்த மகன், தற்போது அதிக விலை மதிப்புள்ள சொத்து ஒன்றை முறைகேடாக விற்றுள்ளார். இதற்கு சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர்கள் உடந்தையாக இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
மேலும், தற்போது பெற்றோர்கள் இருவரையும் யாரும் பராமரிக்க முன் வரவில்லை.இதனால், முதியோர்கள் இருவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்து வருகிறார்கள். பொருளாதார ரீதியில் அவர்களுக்கு யாரும் உதவவில்லை, கவனித்துக் கொள்ளவும் யாரும் இல்லை. அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பலவீனமாக உள்ளனர். எனவே அவர்கள் மகன்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்த செட்டில்மெண்டை ரத்து செய்யக்கோரி கோட்டாட்சியருக்கு மனு செய்துள்ள நிலையில், தற்போது விற்பனை செய்த அந்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்த சொத்துக்களை மீண்டும் பெற்றோர்களுக்கே பெற்று தர வேண்டும் என, தள்ளாத வயதில் தள்ளாடியபடி வந்த அந்த இரு முதியோர்களும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் இவர்கள் சார்ந்த சொத்துக்கள் மீது எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என ‘தாவா’ மனு செய்திருந்தும், பத்திரப்பதிவு அலுவலகர்கள் பணத்துக்காக இது போன்ற மோசடி சம்பவங்களுக்கு துணை போகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
.
You must be logged in to post a comment.