கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளி மாணவர்கள் ‘கல்விச் சுற்றுலா’ – கிழக்கு தெரு ஜமாஅத் நிர்வாகிகள், பெற்றோர்கள் வழி அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவர்கள் வருடம் முழுவதும், பள்ளிப் பாடங்களை ஏட்டளவில் படித்துப் படித்து களைத்துப் போன கண்களுக்கு, கல்விச் சுற்றுலா என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. பள்ளிகளில் அழைத்து செல்லும் இது போன்ற சுற்றுலாக்களால் மாணவர்களின் மனதிற்கு நிம்மதியையும், புத்துணர்வையும் அளிப்பதோடு, அவர்களின் மன இறுக்கத்தையும் வெகுவாக குறைக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்கள், இறுதியாண்டு தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்று, மிக சிறப்பாக தேர்ச்சி பெறுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இரண்டு நாள் கல்வி சுற்றுலாவாக கன்னியாகுமரி, திருவனந்தபுரம் செல்வதற்கான பயணம் இன்று இரவு புறப்பட்டனர். பள்ளியில் இருந்து 35 மாணாக்கர்களும், 19 ஆசிரிய பெருமக்களும் இந்த கல்வி சுற்றுலாவில் பயணிக்கின்றனர். கல்வி சுற்றுலா புறப்படும் அனைவரையும் கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளும், ஜமாத்தினர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் சிறப்பாக வழியனுப்பி வைத்தனர்.

நம் இளைய தலைமுறை மாணவர்கள், இது போன்ற கல்விச் சுற்றுலாக்கள் மூலம், பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மற்றும் அவர்கள் வாழிடங்கள், உடைகள், நடைமுறை பழக்க வழக்கங்கள், மொழிகள் என்று அறிந்து கொள்வதற்கும், ஏட்டளவில் மட்டுமில்லாமல், ஆத்மார்த்தமாய், மனதில் உள் வாங்கிக் கொள்வதற்கும், பேருதவி புரிகிறது.

ஆகவே நம் கீழக்கரை நகரின் ஏனைய பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளி மாணவர்களின், இந்த கல்விச் சுற்றுலா, இறைவன் அருளால், இனிதே சிறப்புற, கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!