தமிழகத்தில் துரோகம் செய்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்…

துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுக வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காவே, என்னுடைய கருத்தை சொன்னேன. இன்றும், அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றேன்.

அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் வலிமையோடு இருக்கும் என்று சொன்னார்களே அதனை நிறைவேற்றவே என் கருத்தை சொன்னேன்.

இரண்டு லட்சம் வாக்களர்களைக் கொண்ட இடத்தில் 5 ஆயிரம் வாக்குகள் பெற்றோம். அப்போதே அதிமுகவின் நிலையை அறிய வேண்டாமா? 2026ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்னே சொல்லவில்லை என்ற கேள்வி எழும். அதனால்தான் வெளியேறியவர்களுடன் 10 நாள்களில் பேசலாம் என்றேன். யாரை சேர்க்க வேண்டும் என்பதை பொதுச் செயலர் முடிவு செய்யலாம் என்று சொன்னேன்.

ஆனால், என்னை கட்சியிலிருந்து நீக்கும்போது நான் பி டீம் என்றார்கள். நான் எந்த டீமிலும் இல்லை. யார் பி டீம் என்பது நாடறியும்.

53 ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டவன். இன்று கட்சியிலிருந்து என்னை நீக்கியிருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இரவெல்லாம் உறங்கவே இல்லை. கண்ணீர் வருகிறது. எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலர்தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் துரோகம் செய்தது யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

முதலில், நான் கட்சியின் மூத்த தலைவர். என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன்பு எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், கட்சியிலிருந்து வெளியேற்றியிருக்கிறார். இது கட்சி விதிகளுக்கு எதிரானது.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்பு கட்சிக்கு வந்தவன் நான். அதிமுகவில் அவருக்கு முன்பே பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். எடப்பாடி பழனிசாமியின் செயல் சர்வாதிகாரப்போக்கு.

துரோகம் செய்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், துரோகம் செய்தது யார்? எல்லாவற்றுக்கும் விடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இத்தனையையும் ஏன் இத்தனை காலம் சொல்லவில்லை என்று கேட்கலாம். ஆனால், கட்சியிலிருக்கும் வரை எதையும் விமர்சிக்க முடியாது.

துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு வழங்க வேண்டும். தமிழகத்தில் துரோகம் செய்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சரியாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!