தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,
“மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இபிஎஸ் தனது பதிவில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. இன்று(ஜன. 21) காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அமமுக டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி உருவாகியுள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க, எங்களுடைய பங்காளிச் சண்டை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









