வளைகுடா நாடுகளுள் யு.ஏ.ஈ என்பது ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி, துபாய், ராஸ் அல் கைமா, புஜைரா, உம்முல் கைம், போன்ற 7 நகரங்கள் இணைந்த ஒரு சிறிய நாடு. இங்கு ஏனைய வளைகுடா நாடுகளை போல எண்ணெய் வளம் பெரிய அளவில் இல்லையென்றாலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு துபாய் என்ற நகரம் ஒன்றே போதும்.
அந்த அளவிற்கு மேற்கத்திய கலாச்சாரங்களை, வேறெந்த அரபு நாடுகளிலும் இல்லாத அளவிற்கு புகுத்தி அந்நிய முதலீட்டை பெருமளவு பெற்றுள்ளனர். அதே போல வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணையை வெளிநாடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் முக்கியத் துறைமுகம் துபாயில் இருக்கிறது. அதனால் போட்டி போட்டுக் கொண்டு தொழில் துவங்க துபாய் நகரத்தையே வெளிநாட்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து பொருளாதாரம் தேடி கடல் கடந்து செல்பவர்களின் முதன்மை தேர்வாக துபாய் ஐக்கிய அரபு அமீரகம் தான் இருக்கிறது. அமீரகத்தின் மொத்த மக்கள்தொகை 29 லட்சம். அதில் இந்தியர்களின் மக்கள்தொகை மட்டும் 9 லட்சம். மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இந்தியர்கள்.
விண்ணை தொடும் கட்டிடங்கள், ஆழ் அற்புத கடலுக்குள் தீவு, உலகிலேயே உயரமான கோபுரம், எழில் கொஞ்சும் கடற்கரை என்றெல்லாம் ஏகத்துக்கு வர்ணிக்கப்படும் துபாய் நகரத்தின் மறுபக்கம் கொஞ்சம் விசித்திரமானது. வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை சுகாதாரமற்ற தங்கும் வசதி.
எந்த சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றாத, மனித உரிமை மீறல்களைக்கொண்ட பணியிடங்களும், சுகாதாரமற்ற தங்கும் இடங்களும்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்விடம். நெருக்கடியான ஓர் அறைக்குள் குறைந்தது 4 பேர்கள் தங்குவார்கள்.

இன்னும் வில்லா எனும் அமைப்பில் உள்ள பழங்கால அரபி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் பணியாளர்கள் சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்துவதையும், அடுக்குப் படுக்கைகளில் தொழிலாளர்கள் உறங்குவதைப் பார்க்க முடியும். அதே போல அந்த சிறிய அறைக்குள்ளேயே, அடுப்பங்கரையும் இருக்கிறது. அதில் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுகின்றனர்.
இந்த நாடுகளில் தொழிலாளர்கள் பல இடங்களில் ஏறத்தாழ 10 மணி நேரத்துக்கும் மேலாக உழைக்கவேண்டியதும் இருக்கும். இந்நிலையில் சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, குடுமபத்தை விட்டு விலகி வெகு தூரம் இங்கு வந்து வேலை செய்யும் இவர்களை விரைவில் நோயாளிகளாக மாற்றி விடுகிறது. ஆனாலும் வேறு வழியின்றி குடும்பச்சூழலைக் கருத்தில்கொண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள்.
`வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான வாழ்விடங்களை நிறுவனங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என அமீரக அரசு பலமுறை உத்தரவிட்டும் பெரும்பாலான நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதில்லை. இதையடுத்து, சட்ட திட்டங்களை கடுமையாக்க அமீரக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்துக்குள், அமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான வாழ்விட வசதிகளை அளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. `இல்லையென்றால் 2 லட்சம் திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல அபுதாபியில், `முஷாபா’ என்ற தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் உள்ளது. இந்த நகரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அபுதாபி முனிசிபாலிட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதியில் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த அறிக்கையை ஏப்ரல் 6-ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் E.H.S எனப்படும் சுற்றுச்சூழல், சுகதாரம், பாதுகாப்பு சர்வதேச விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் அபுதாபி தீவுப் பகுதி, பனியாஸ், வாத்பா, ஷாம்பா போன்ற பகுதிகளில் பணியாட்களின் வாழ்விடங்களின் நிலை பரிதாபகராமானதாக இருக்கிறதாம். இதற்காக அபுதாபி முனிசிபாலிட்டி, அபுதாபி போலீஸ், அரசு ஆகியவை இணைந்து இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக பணியாளர்களின் வாழ்விடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளால் விரைவில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்கும் என்று நம்புவோமாக…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









