மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன் – 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்..

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்த நிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். அதனால், அவர் அப்பகுதி மக்களின் பாராட்டுக்குரியவரானார். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கபீல்கான் கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு, 7 மாதங்கள் சிறையில் இருந்த அவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காஷிப் ஜமீல் நேற்று இரவு கோரக்பூரில் ஹுமாயூன் பூர் பகுதிக்கு வந்தபோது, இரு சக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார்கள். இதையடுத்து, ஜமீல் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் கபீல்கான் ட்விட்டரில் இன்று கூறுகையில், ”முதலில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் சகோதரர் ஜமீல் உடலில் இருந்து 3 துப்பாக்கிக் குண்டுகளை வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்துவிட்டோம். தற்போது அபாயக் கட்டத்தை தாண்டி, ஐசியுவில் இருக்கிறார். அவரைக் கொல்வதற்காக 3 முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்றப்பட்டுவிட்டார். யார் சுட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், முதல்வர் ஆதித்யநாத் தங்கிஇருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில், கோரக்நாத் கோயில் அருகேதான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. என் சகோதரருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க போலீஸார் காலதாமதம் செய்து இருக்கிறார்கள், 3 மணிநேரம் கழித்தே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இதுதான். எங்களுக்குப் பக்கபலமாக அல்லாஹ் இருக்கிறார். நான் எந்தவிதமான மிரட்டலுக்கும் நான் பணிந்து செல்லவோ, வளைந்து கொடுக்கவோ மாட்டேன்” என கபீல்கான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கோரக்பூர் போலீஸ் எஸ்பி. சலாப் மாத்தூர் கூறுகையில், ”அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்” எனத் தெரிவித்தார்.
நன்றி:- இந்து நாளிதழ்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!