ஸ்ரீவைகுண்டம் – அரியநாயகிபுரம் பள்ளி மாணவன் தேவேந்திரன் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.!
தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சார்ந்த தேவேந்திரன் என்ற 17 வயது பள்ளி மாணவன் ஆதிதிராவிடர் எனும் பறையர் சமுதாயத்தை சார்ந்தவர். அவர் இன்று காலை பள்ளிக்கு பேருந்தில் பயணித்த பொழுது அரியநாயகிபுரத்திற்கு அருகில் உள்ள கெட்டியம்மாள்புரம் என்ற கிராமத்தைச் சார்ந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் அவரை கொலை செய்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு கொடிய ஆயுதங்களால் தாக்கி உள்ளார்கள். அவர் இப்போது ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவேந்திரன் என்ற மாணவர் மீது நடத்திய இந்த வன்கொடுமை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கபடி போட்டியில் தகராறு என்று காவல்துறை சொன்னாலும் அல்லது காதல் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலும் இது கண்டனத்திற்குரிய விஷயமாகும். பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கல்வி நிறுவனங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், காவல்துறை குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்து, உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் மீது இதுபோன்று தொடரும் வன்கொடுமைகள் குறித்து ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறோம். இதில் காவல்துறை விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என்று நாம் பலமுறை எச்சரித்தாலும் கூட காவல்துறை இதில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான பதவிகளை ஆக்கிரமித்துக் கொள்வதும், வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எவரேனும் அதிகாரியாக வந்தால் அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை வெளியேற்றி விட்டு அது போன்ற காவல் அதிகாரிகளே கிரிமினல் குற்றவாளிகளுடன் கைகோர்த்து செயல்படுவதால் இதுபோன்று வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு அச்சமில்லாமல் போய்விடுகிறது. அவர்களை காப்பாற்றுவதற்கு சாதிய அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவர்களை மீண்டும் மீண்டும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறது. போதாக்குறைக்கு சமூக விரோத கும்பல்களுக்கு மாவட்ட அமைச்சர் பெருமக்களின் ஆதரவும் கிடைத்து விடுகிறது.
அதேபோன்று தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து காவல் நிலையங்களில் உள்ள உளவுத்துறையை சார்ந்தவர்களும் 10 முதல் 15 வருடங்கள் அதே இடத்தில் பணியாற்ற கூடியவர்களாகவும், அவர்களே பல சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும் இருந்து வருகின்றனர். தென் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை ஏழை, எளிய மக்கள் பதட்டத்துடன் வாழும் நிலை ஏற்படுகிறது. இது வெறும் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல; தமிழகத்தில் ஏழை, எளிய, சிறுபான்மை சமுதாயத்தினர் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், சமாதானமாகவும் வாழவே முடியாத நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, வன்முறை கும்பல்களின் பிடியிலிருந்து தமிழக மக்களை விடுதலை செய்வதை குறிக்கோளாக கருதி இனியாவது தமிழக காவல்துறைக்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி,
You must be logged in to post a comment.