இறுமாப்புடன் சொல்கிறேன், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது.
இந்த விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இரு தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து பல விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
இதன்பின்னர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விஜய், திமுக அரசை நேரடியாகத் தாக்கிப் பேசினார்.
அப்போது, ‘கூட்டணி கணக்குளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..
நீங்கள் உங்களின் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்’ என்று பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி,
‘வெற்றி மக்கள் கரங்களில் இருக்கிறது என்று பணியாற்றினால் வெற்றி நிச்சயம். முதல்வர் சொன்னதுபோல அடுத்த தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இறுமாப்புடன் சொல்கிறேன். வெற்றி நிச்சயம், நிச்சயம்’ என்று பேசியுள்ளார்.
You must be logged in to post a comment.