ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் முறைகேடு செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் – (மறைந்த) முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் சுப்பைய்யாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தின் அமைச்சர். அவர் முதலில், ‘குட்கா ஊழலிலும்’ இப்போது ‘கரோனா ஊழலிலும்’ பிஸியாக இருப்பதால் – தமிழக மக்களை மட்டுமல்ல – சொந்த புதுக்கோட்டை மாவட்டத்தையே கரோனாவிலிருந்து அவரால் காப்பாற்ற முடியவில்லை. புதுக்கோட்டையில் கரோனா பாதிப்பு – 7000- ஐ தாண்டி விட்டது. கரோனாவால் மரணம் 116–ஐ தாண்டி விட்டது. இதுவும் உண்மைக் கணக்கா என்றால் அதுவும் இல்லை. கரோனா நோய்த் தொற்றையும், அதனால் ஏற்பட்ட இறப்புகளையும் குறைத்துக் காட்டியே, இன்றைக்குப் புதுக்கோட்டை மாவட்டம் கரோனாவின் கடுமையான பாதிப்பில் இருக்கிறது.
கரோனா தொல்லை இப்படியென்றால் – ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர்ப் பணிகளைச் செய்யக் கூட நிதி கொடுப்பதில்லை. ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பணிகளை இங்குள்ள ஆட்சியர் ‘பேக்கேஜ் டெண்டர்’ விடுகிறார். அவர் முன்பு, விஜயபாஸ்கரின் துறையில் பணியாற்றி விட்டு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக வந்தவர். பேக்கேஜ் டெண்டரை எதிர்த்து வழக்குப் போட்டால் – அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வைக்க ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் முன்தேதியிட்டு தீர்மானம் போட்டுத் தரச் சொல்லி மிரட்டுகிறார். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே – ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி மூலம் மாவட்டத்தில் உள்ள 490-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை மிரட்டுகிறார் என்றால் – அதற்கு எப்படி தைரியம் வந்தது? அதனால்தான் நான் விடுத்த அறிக்கையில், “இப்படி முன்தேதியிட்டு தீர்மானம் பெறுவது” கிரிமினல் சதி என்று எச்சரித்தேன்.
ஊழல் அமைச்சர் புதுக்கோட்டையில் இருப்பதால், இங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவரும் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் தைரியமாக இறங்குகிறார். அவர் நாளை, சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டியதிருக்கும். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சரி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சரி, கரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, அவர்களுக்கு முக்கியமான பணி அல்ல… ஊழல் செய்வது மட்டுமே அவர்களின் ஒரே பணி! அதனால்தான் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னால் போய் விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை – ஊழல்களை நாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சியை விரட்டியடிப்போம்! விரைவில் கழக ஆட்சி அமைப்போம்! நன்றி!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









