பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். அத்துடன் காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்தார்கள்.ஆனால் தி.மு.க. தரப்பில் 5 பிளஸ் 1 என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.பேச்சுவார்த்தை முழுவதும் டெல்லி தலைவர்களுடனேயே தொடர்ந்தது. தி.மு.க. தரப்பில் ஒரு கட்டத்தில் 6 பிளஸ் 1 என்று முடிவாக சொல்லியதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வடமாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுத்து பிடித்தது போல் தமிழகத்திலும் சிக்கல் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் காட்டியது. அதே போல் 12-ல் இருந்து குறைவாக சம்மதிக்கப் போவதில்லை என்று காங்கிரசும் பிடிவாதம் காட்டியது.இதனால் உடன்பாடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. வரட்டும் பார்க்கலாம் என்று இரு தரப்பும் கொஞ்ச நாட்கள் விட்டு பிடித்தன.இதற்கிடையில் 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.இரண்டு தொகுதிகளுக்காக மல்லு கட்டிய வைகோவும் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்.கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.அடுத்து காங்கிரஸ்தான் என்ற நிலையில் தி.மு.க. தலைவர்கள் நேற்று டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எல்லா கட்சிகளுக்கும் பழைய எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்து விட்டோம். எனவே நீங்களும் கூடுதல் தொகுதி வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள். பழைய எண்ணிக்கையில் அதாவது 9 பிளஸ் 1 தர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.தொகுதி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று மாலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜய்குமார் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.விமான நிலையத்தில் இருந்து நேராக அறிவாலயம் செல்கிறார்கள். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடுகிறார்கள்.இந்த உடன்பாட்டின் போது எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.அதே போல திமு.க. தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தியதில் சில தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றும் அதனால் அந்த தொகுதியை மாற்றி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.தலைநகர் சென்னையிலும் ஒரு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக தென்சென்னை தொகுதியை கேட்கிறது. இது தி.மு.க. கைவசம் இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









