ஆர்எஸ் பாரதியை கைது செய்ததை கண்டித்து நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
இன்று அதிகாலை கழகத்தின் அமைப்புச் செயலாளரும் பாராளுமன்ற மேலவை உறுப்பினருமான அண்ணன் ஆர் எஸ் பாரதி அவர்களை தமிழக அரசு பொய் வழக்கில் கைது செய்ததை நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பாக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு பொய் புகாரை தற்பொழுது அதிகாலையில் கழகத்தின் அமைப்பு செயலாளரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது . உளஅரங்கத்தில் பேசிய ஒரு விஷயத்தை தேவையில்லாமல் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இன்றைக்கு தமிழக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருக்கிறது. முதலமைச்சர் ,துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் மீது கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் ஆர் எஸ் பாரதி அவர்கள் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை பல்வேறு ஊழல் புகார்கள் அளித்து இருக்கிறார் .
அந்த ஊழல் புகார்கள் எல்லாம் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை எதிர்கொள்ள முடியாத தமிழக முதலமைச்சரும் அமைச்சர்களும் தற்போது தங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு மூத்த பாராளுமன்ற வாதியை கழகத்தின் அமைப்பு செயலாளரை கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்து வருபவரை கைது செய்திருப்பது மனித உரிமைகள் மீறிய செயலாகும். ஜனநாயகத்தின் குரல் வளையை தமிழக அரசு தொடர்ந்து நெறித்து வருகிறது என்பதற்கு ஆர் எஸ் பாரதி அவர்களின் கைது ஒரு உதாரணம். தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும், சமூக நீதிக்காகவும் என்றைக்கும் போராடிக் கொண்டிருக்க கூடிய ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
கொரோனா காலத்தில் திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரும் புகழும் தமிழகத்தில் வளர்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி அரசு ,கழகத்தின் முன்னணி தலைவரை கைது செய்து அதன் மூலம் கழகத்தை மிரட்டி பார்க்கலாம் என நினைத்தால் அது பகல் கனவாக தான் இருக்கும். வழக்குகளை கண்டு திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்கும் அஞ்சியதில்லை. கழகத்தின் தலைவர் திருமணமான சில தினங்களில் இளம் வயதிலேயே ஓராண்டுகாலம் மிசாவை அனுபவித்து கழகத்திற்காக மக்களுக்காகவும் தியாகங்கள் செய்தவர் .
அந்தத் தியாகத் தலைவரின் தலைமையில் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தொண்டர்களும் பொய் வழக்கை கண்டு என்றைக்கும் அஞ்சியதில்லை. பொய் வழக்கு தொடுத்த தமிழக அரசை நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பாக வன்மையாக கண்டித்து உடனடியாக கழகத்தின் அமைப்பு செயலாளரை இடைக்கால ஜாமீனில் எடுக்க பேருதவி புரிந்த கழகத்தின் மூத்த வழக்கறிஞர்கள், கழகத்தின் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோருக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். பேட்டியின்போது கழக வழக்கறிஞர்கள் சிவதாஸ் ,புகழரசன், அருள்தாஸ், அறிவொளி மற்றும் முருகவேல் ஆகியோர் இருந்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.