பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்பது பற்றி மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை கூறினார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஒரு சிலர் பா.ஜ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தே.மு.தி.க.வை அ.தி.மு.க.வும் பாரதீய ஜனதாவும் தங்கள் பக்கம் இழுக்க மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டனர். தங்கள் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தே.மு.தி.க. தலைமை பொறுப்பாளரிடம் பேசி வருகின்றனர்.4 அல்லது 5 தொகுதிகள் வரை கூட்டணியில் ஒதுக்குவதாக பேசி வருகின்றனர். ஆனாலும் இது பற்றி தே.மு.தி.க. தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அ.தி.மு.க. அணியில் சேர்வதா? பா.ஜனதா அணியில் சேர்வதா? என்று முடிவெடுக்காமல் மதில் மேல் பூனையாக தே.மு.தி.க. இருந்து வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வரும் நிலையில் தே.மு.தி.க. மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தே.மு.தி.க. எந்தவித சலசலப்பும் இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருப்பது ஏன் என்று அதன் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவரது விளக்கம் ஏற்புடையதாக இருந்தது. அவர் கூறியதாவது:-இந்த கட்சி ஒரு குடும்பத்தைப் போல கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 60 நாட்கள் கட்சியில் துக்க நாட்களாக பின்பற்றப்பட்டு வருவதால் தேர்தல் பணியில் இதுவரை ஈடுபடவில்லை.டிசம்பர் மாதம் 28-ந்தேதி விஜயகாந்த் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து 60 நாட்கள் கட்சியிலும் சரி குடும்பத்திலும் சரி எவ்வித முக்கிய காரியங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் துக்க நாட்கள் நாளையுடன் முடிகிறது.அதன் பின்னர்தான் தேர்தல் கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேசுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் கட்சியின் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கப்படும் முதல் தேர்தல் என்பதால் யாருடன் கூட்டணி வைப்பது என்பதை முடிவு செய்வதோடு எத்தனை இடங்களில் போட்டி இடுவது என்பது பற்றியும் இறுதி செய்து எங்களது நிலைப்பாட்டிற்கு ஒத்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். வெற்றி பெறுவோம். பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரல் ஒலிக்கும். அது நிச்சயம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.விஜயகாந்த் மறைவு துக்க நாட்கள் அனுசரிப்பு நாளையுடன் முடிவதால் மார்ச் 1-ந்தேதி முதல் தேர்தல் பணிகளை தீவிரபடுத்த கட்சி தலைமை திட்டமிட்டு உள்ளது.பிரேமலதா தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு விரைவில் நியமிக்கப்படுகிறது. குழுவினரிடம் அ.தி.மு.க. பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் விருப்ப மனுக்கள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் தே.மு.தி.க. அடுத்து வரும் சில நாட்களில் கூட்டணியை இறுதி செய்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









