தென்காசி மாவட்டத்தில் வரி விதிப்பிற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் அகமது உமர். இவர் சிவகிரி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் என்பவரிடம் புதிய வீட்டிற்கு வரிவிதிப்பு செய்வதற்காக ரூபாய் 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தொடர்பு கொண்டு ரசாயனம் தடவிய ரூபாய் 15 ஆயிரத்தை வாங்கி வந்து அதனை வருவாய் உதவியாளர் அகமது உமரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையிலான போலீஸ் படையினர் வருவாய் உதவியாளர் அகமது உமரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வடுகபட்டி கிராமம் தெற்கு சத்திரத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்பவரது மகன் காளிராஜன் (வயது 36) என்பவர் புளியங்குடி நகராட்சி பகுதியில் 28 வது வார்டு சிவராமு நாடார் ஏழாம் தெருவில் சுமார் 3 சென்ட் காலி மனையை கற்பகம் என்பவரிடம் வாங்கி மேற்படி மனையில் சுமார் 800 சதுர அடியில் வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது முதலில் காலி மனை தீர்வை கட்டச் சொல்லி அதற்கு விண்ணப்பிக்கும் படி கூறியுள்ளனர். அதனால் காளிராஜன் 14.03.2025 ஆம் தேதி காலி மனை தீர்வை கட்ட விண்ணப்பித்து காலி மனை தீர்வை கட்டியுள்ளார். பின்னர் புதிதாக கட்டிய வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயம் செய்வதற்காக புளியங்குடி நகராட்சியில் 21.03.2025 அன்று விண்ணப்பித்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், காளி ராஜன் வீட்டுக்கு சென்று பார்த்து அளவீடு செய்து காளி ராஜனிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய தனக்கு தனியாக ரூபாய் 20 ஆயிரம் கொடுத்தால் தான் ரசீது போட்டு தருவேன் என்று கூறியுள்ளார். அதற்கு காளிராஜன் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் அகமது உமர் 15 ஆயிரம் ரூபாயாவது கொடு என்று கூறியுள்ளார். ஆனாலும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க விருப்பம் இல்லாத காளிராஜன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் 15 ஆயிரத்தை காளி ராஜனிடம் கொடுத்துள்ளனர். அந்த பணத்தை காளிராஜன் வீட்டில் வைத்து புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரிடம் கொடுத்த போது அவர் அதனை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால் சுதர் மற்றும் ஆய்வாளர் ஜெயஸ்ரீ உதவி ஆய்வாளர் ரவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தெய்வ கண் ராஜா வேணு கோபால், பிரபு, கோவிந்த ராஜன், தலைமை காவலர் கணேசன் மற்றும் பிரவீனா ஆகியோர் அகமது உமரை கையும் களவுமாக கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு (அறையில்) பிரிவில் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின் கைது செய்யப்பட்ட அகமது உமர் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அகமது உமர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்