நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முதல் வார்டு பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைச்சாமி தனக்கு சொந்தமான வீட்டை தனது மகன் விஜய கண்ணனுக்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆடு மேய்ப்பு தொழிலுக்கும் செல்ல முடியாத மலைச்சாமி வீட்டிலேயே முடங்கினார்.இதனால் வீட்டில் இருப்பவர்கள் மலைச்சாமியை பாரமாக நினைக்கத் தொடங்கினர்கள். இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பாக கடைசி காலம் வரை மகன் இருப்பார் என நம்பிய தந்தை, சொத்து கைமாறியவுடன் தந்தையை கைவிட்டு உள்ளார். மேலும் அவருடைய மனைவியும் இவரை விட்டு பிரிந்து விட்டார் . மனைவி மற்றும் மகன் இருவரும் கைவிட்டதால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமலும் தங்குவதற்கு இடமில்லாமலும் வயதான காலத்தில் மலைச்சாமி தவியாய் தவித்துள்ளார். கிடைத்ததை சாப்பிட்டும், தெருவில் உறங்கியும் தனது அன்றாட பொழுதை கழித்த மலைச்சாமி தன்னை ஏமாற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தனக்கு சொத்தை மீட்டு தாருங்கள் என நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடியிடம் மனு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த மனு உரிய விசாரணைக்காக கோட்டாட்சியருக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வதாக வட்டாட்சியர் தனுஷ்கோடி கூறியுள்ளார். தனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும் மலைச்சாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்..
You must be logged in to post a comment.