பழனி – புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? கொங்கு மக்கள் முன்னணி, வலியுறுத்தல்..
“பழனி -புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது இந்த சாலையின் வழியாகத்தான் பழனியில் இருந்து தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் நாள்தோறும் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. பழனி நகருக்குள் நுழையும் முக்கிய பகுதியில் இந்த கேட் அமைந்துள்ளதால் நாள்தோறும் ரயில் வருகிற நேரங்களில் இந்த கேட் மூடப்படுகிறது அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கும்நிலை ஏற்படுகிறது. பழனி நகரம் சுற்றுலா தளமாகவும், ஆன்மீக தளமாகவும் இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் வந்து செல்வதால் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதன் முதல் நடவடிக்கையாக புது தாராபுரம் சாலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பழனி வழியாக தற்பொழுது தினமும் 10 முதல் 12 ரயில்கள் பழனி -தாராபுரம் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. இதில் கேட் மூடப்படும் போது நிற்கும் சில நிமிடங்களில் சாலையின் இரு புறங்களிலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடியும்.
பழனியில் நகருக்கு வெளியேயும், நகருக்குள்ளும் இந்த வழியாக ஆம்புலன்சுகள் அதிகம் செல்வது உண்டு. இதில் ரயில் வருகிற நேரத்தில் கேட் மூடப்படும் போது ஆம்புலன்சுகள், வாகனங்களோடு வரிசையில் நிற்கும். அதனால் நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதேபோல் ரயில் கடந்து சென்ற பின் கேட் திறக்கப்படும் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி செல்வதும் உண்டு. அதேநேரத்தில் பஸ்கள், கார்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களும் செல்லும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அவ்வழியாக பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் விவசாயிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்
பழனியில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் பழனி – தாராபுரம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள். அதன்பின் அறிவிப்போடு நின்றுவிடும் ஏற்கனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அதன்பின் அதுபற்றி எதுவும் அறிவிப்பு இல்லை! இதுவரை எந்த பணிகளும் துவங்கப்படவும் இல்லை! ஆகவே, மத்திய, மாநில அரசுகளும், பாரளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு பழனி – புதுதாராபுரம் சாலை ரயில்வே மேம்பால பணியை விரைந்து செயல்படுத்திட துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, காலம் தாழ்த்தாமல் பணியை முழுமையாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கொங்கு மக்கள் முன்னணியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
சி.ஆறுமுகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொங்கு மக்கள் முன்னணி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









