முடிவுக்கு வரும் டிஜிட்டல் கிராப் சர்வே! திண்டுக்கல் முதலிடம்! இனி விவசாயிகள் அடங்கல் வாங்குவதில் சிக்கலா.?

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.

நாடு முழுவதும் எண்மத் தொழில்நுட்பத்தில் பயிர்க் கணக்கீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்புகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புப் பணிகளுக்காக இந்த எண்மத் தொழில்நுட்பப் பயிர்க் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.

தமிழகத்தில் இந்தக் கணக்கீட்டுப் பணி கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. வேளாண் கல்லூரி மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள் எழுந்த நிலையில், 38 மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி கணக்கீட்டுப் பணி நடைபெற்றது. 38 மாவட்டங்களில் 302 வட்டங்களுக்குள்பட்ட 17,164 கிராமங்களிலுள்ள 50.79 லட்சம் பட்டா நிலங்களில் 4.06 கோடி உள்பிரிவுகளில் இந்தக் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வேளாண் கல்லூரி மாணவர்களின் துணையுடன் நடைபெற்ற கணக்கீட்டுப் பணி கடந்த சனிக்கிழமையுடன் (நவ. 16) நிறைவடைந்தது.

மொத்தமுள்ள 4.06 கோடி உள்பிரிவுகளில், வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் துறை அலுவலர்கள் இணைந்து 3.45 கோடி உள்பிரிவுகள் கணக்கீடு செய்யப்பட்டன. பிறகு, இவை எண்மத் தொழில்நுட்பப் பயிர்க் கணக்கீட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் 6.06 லட்சம் உள்பிரிவுகளில் ஆய்வு நடத்த வேண்டிய பணிகள் எஞ்சியுள்ளன. மாநில அளவில் 85.07 சதவீத கணக்கீட்டுப் பணிகள் நிறைவடைந்தன.

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட கணக்கீட்டுப் பணியில் திண்டுக்கல் மாவட்டம் 14.33 லட்சம் உள்பிரிவுகளில் 100 சதவீதம் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் 15.12 லட்சம் உள்பிரிவுகளில் ஓர் உள்பிரிவு நீங்கலாகவும், திருப்பத்தூர் மாவட்டம் 4 உள்பிரிவுகள் நீங்கலாகவும் எஞ்சிய அனைத்து உள்பிரிவுகளிலும் இந்தப் பணிகளை நிறைவு செய்து 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தன.

இந்த 3 மாவட்டங்களிலும் முறையே 17.02 லட்சம், 17.81 லட்சம், 5.68 லட்சம் பயிர்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கணக்கீட்டுப் பணியில், குறைந்தபட்சமாக விழுப்புரத்தில் 37.41 சதவீதம், காஞ்சிபுரத்தில் 29.36 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றன.

திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர், சென்னை ஆகிய 4 மாவட்டங்கள் நீங்கலாக, எஞ்சிய 34 மாவட்டங்களில் 60.61 லட்சம் உள்பிரிவுகளில் கணக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இந்தப் பணிகள், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

 இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் நடத்தப்படும் எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம், குறிப்பிட்ட சர்வே எண்ணில், என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் கண்காணிக்க முடியும்.

குறிப்பாக, விவசாயிகள் இணைய வழியில் அடங்கல் எடுப்பதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும். அடங்கல் பெறுவதற்காக வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.  விவசாயிகள் வங்கி கடன் பெறுவதற்காக சாகுபடி செய்த பயிரை  தவிர   மாற்றியோ அல்லது கூடுதல், குறைவாகவோ, இனி அடங்கல் பெற  முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மூலம் நடத்திய கணக்கீட்டை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் தோராயமாகத் தேர்வு செய்யப்பட்ட 57,432 தரவுகள் வேளாண் துறை அலுவலர்கள் மூலம் மறுஆய்வு செய்யப்படவுள்ளன. இதை உறுதி செய்த பின்னரே, அனைத்து தரவுகளின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!