ராமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டிட்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது.
புயல் காரணமாக தென் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. நேற்று இரவு முதல் படிப்படியாக மழை குறைந்து வருவதால், தற்போது ராமேஸ்வரத்தில் சற்று மழை ஓய்ந்துள்ளது.
கடந்த 3 நாள்களாக கொந்தளிப்பாக இருந்த கடல் தற்போது சற்று சாந்தமாகியுள்ளது.
காற்றின் வேகம் குறைந்துள்ளது. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாம்பன் பாலத்தின் வழியே ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


You must be logged in to post a comment.