கீழக்கரை நகரில் இருக்கும் மொத்தம் 21 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 35 க்கும் மேற்பட்ட தெருக்களை கொண்ட நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள கீழக்கரை நகர் முழுமைக்கும் கீழக்கரை நகராட்சி சார்பாக கணேசன் என்கிற ஒரே ஒரு ஒப்பந்த பணியாளர் மட்டும் தனி ஒருவனாக கொசு மருந்து புகை அடித்து சாதனை புரிந்து வருகிறார்.
இதனால் டெங்கு மற்றும் மலேரியா கொசுக்களின் அதிரடி அட்டகாசம் நகர் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட இரத்த அணுக்கள் குறைவால் இராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது மட்டும் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகராட்சி சார்பாக தடுப்பு நடவடிக்கைகள் நகர் முழுவதும் ஒரே நேரத்தில் எடுக்கப்படாததால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு புகை மருந்து தனி ஒருவனால் அடிக்கப்படுவதால் புகை அடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கீழக்கரை நகராட்சியில் கொசு மருந்து புகை அடிக்க, ஐந்து இயந்திரங்கள் இருந்தும், ஒன்று மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மற்றவை பயனற்ற நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. சுழற்சி முறையில் தினமும் தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருவதாக நகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டாலும், ‘தனி ஒருவன்’ கணேசன் கீழக்கரை நகர் முழுவதுக்கும் புகை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். மேலும் இவரே தான் நகர் முழுவதும் புகை அடிக்க செல்ல வேண்டியுள்ளதால் தெருக்களின் முழுமைக்கும் புகை அடிக்கப்படாமல் அவசரகதியில் செல்ல வேண்டியுள்ளது.


கீழக்கரை நகராட்சி ஆணையாளர் உடனடியாக நகராட்சியில் காட்சி பொருளாக இருக்கும் அனைத்து புகை அடிக்கும் இயந்திரங்களையும் கூடுதல் பணியாளர்களை நியமித்து கீழக்கரை நகர் முழுவதும் ஒரே நேரத்தில் புகை மருந்து அடிக்க முன் வர வேண்டும். முக்கியமாக இரவு நேரங்களில் புகை மருந்து அடித்து மக்களின் துயரத்தை போக்க முன் வர வேண்டும்.
செய்வீர்களா…? நீங்கள் செய்வீர்களா…??


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









