கீழக்கரை நகராட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் தீவிரம் அடைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சகம், நகராட்சிகள் இயக்குனரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதே போல் கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும் ஏராளமான மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சக்தி, ஹாஜா, மனோகரன் ஆகியோர் பல்வேறு வார்டு பகுதிகளுக்கும் குழுவாக பிரிந்து சென்று நோய்களின் தீவிரத்தை குறைக்க, புதுவித முயற்சியாக நிலவேம்பு கசாயத்தை வீடு வீடாக கொண்டு சென்று வழங்கி வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளர். சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம் கூறுகையில் ”கீழக்கரையில் சிட்டிசன் செய்ய முடியாத வேலைகளை எல்லாம் பல நேரங்கள் பெட்டிஷன்கள் தான் செய்து முடிக்கிறது. பலமுறை கீழக்கரை நகரின் சுகாதாரக் கேடுகளை நகராட்சி நிர்வாகத்தினரிடம் கொண்டு செல்லும் போதெல்லாம் மெத்தனப் போக்கிலேயே காலம் தள்ளி வந்தனர்.

தற்போது டெங்கு, மர்ம காய்ச்சலால் நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர கடந்த வாரம் பல்வேறு துறைகளுக்கும் பெட்டிஷன்களை அனுப்பி இருந்தோம். நேற்று முதல் கீழக்கரை நகரில் ஓரளவுக்கு சுகாதாரம் செழிக்க துவங்கி இருக்கிறது. தற்போது நகராட்சி சார்பில் ஜரூராக சுகாதார பணிகள் முடுக்கி விட்டிருப்பதை காண முடிகிறது.
கீழக்கரை நகராட்சியில் பல காலங்களாக காட்சி பொருளாக இருந்த புகை அடிக்கும் இயந்திரங்களும் தற்போது நகருக்குள் வலம் வர துவங்கியுள்ளது. அதே போல் நகராட்சி சார்பாக முன் எப்போதும் இல்லாத புது யோசனையாக வீடு வீடாக சென்று நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டு வருகிறது. டெங்குவை கீழக்கரையில் இருந்து விரட்டும் வரை பெட்டிஷன்களை எழுதி கொண்டே தான் இருப்போம். தற்போது கள பணிகளை ஆற்றி வரும் நகராட்சி நிர்வாகத்தினருக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.
இது குறித்து கீழக்கரை மக்கள் களத்தின் பொருளாளர்.
சட்டப் போராளி ஜாபிர் சுலைமான் கூறுகையில் ”இவையெல்லாம் வெறும் கண் துடைப்பாக இல்லாமல், இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தொடர்ந்து நகராட்சி சார்பாக சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. நகராட்சி கண்ணும் கருத்துமாக இந்த விஷயத்தில் செயலாற்ற வேண்டும்.
அரசு துறையினருக்கு பெட்டிஷன் செய்தால் வேலை நடக்குமா..? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். அவ்வாறு நீங்கள் யோசிக்க தேவையில்லை. இன்ஸா அல்லாஹ் நிச்சயம் வேலை நடக்கும். ஒரு முறை பெட்டிஷன் செய்து நடக்கவில்லை என்றால் மீண்டும் அதனை முறையாக தொடர்ந்து செய்து அரசு அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். மனுக்கள் என்பது ஜனநாயக வழியில் போராடும் அனைவருக்கும் அவசியமான ஆயுதமாகும்” என்று தெரிவித்தார்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









