மதுரை அருகே, பரவை பேரூராட்சியில் ,1.20 கோடி நிதியை ஒதுக்காமல் பேரூராட்சி செயல் அலுவலர் காலதாமதம் செய்வதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக ரூ.ஒரு கோடியே 40 லட்சம் பணம் நிதி ஒதுக்கியும் , அதில் ரூ.20 லட்சத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கி நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், மீதமுள்ள ரூ.ஒரு கோடியே இருபது லட்சம் நிதியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தாமல், பேரூராட்சி அதிகாரிகள் கால தாமபடுத்துவதாகவும் குடிநீர் , தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள முடியாமல், பரவை பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளிலும் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் மேற்கொள்ள முடியாமல் கவுன்சிலர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக செயல்படுத்தபடாமல் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் பணிகள் முடங்கி கிடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் மனு அளித்தும் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, அங்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர், கவுன்சிலர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இன்னும் 15 நாட்களுக்குள் நிதியை ஒதுக்காவிட்டால், கவுன்சிலர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.