டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் என்ன என்ன என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் உள்ளதா என்பதை விளக்க கோரி டெல்லி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக டெல்லி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் தொடர்சியாக 15 நாட்கள் விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, ஏ கே சிக்ரி, கன்வில்கர், சந்திரசூட், ஆசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த டிசம் 6 ஆம் தேதி தீர்ப்பினை ஒத்திவைத்தது. தேசிய தலைநகர் சட்டப்பிரிவு 239 ஏ ஏ படி துணை நிலை ஆளுநரின் அதிகார வரம்புகளை நிர்ணயிக்க கோரிய இந்த மனு மீது தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
டெல்லி அரசின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் பைஜால் அனுமதி வழங்கால் முட்டுகட்டையாக இருந்தார். இதனையடுத்தே நீதிமன்றத்தை நாடியது டெல்லி அரசு. மேலும் டெல்லி அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இனி இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்…
தீர்ப்பின் உண்மை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யவும் ..
தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் தனிதனியாக தீர்ப்பு வழங்கினர். மற்ற இருவரும் தலைமை நீதிபதியின் தீர்ப்பில் கையொப்பம் இட்டனர்.
ஆளுநருக்கான அதிகார வரம்பு அரசியல்சாசனத்தை மதிக்கும்படியே இருக்க வேண்டும் என தீபக் மிஷ்ரா தீர்பப்பை எழுதியுள்ளார். மேலும் துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என திட்டவட்டமாக கூறினார்.
டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல்சாசன பிரிவு 239ஏ ஏ பின் அம்சங்களை விளக்கிய தலைமை நீதிபதி, டெல்லிக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போன்று மாநில அதிகாரம் கிடையாது எனவும், துணைநிலை மாநில ஆளுநர் போன்றவர் அல்ல எனவும் விளக்கப்பட்டது.
மக்கள் நல திட்டங்கள் துணை நிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் பொறுப்பேற்க வேண்டியது இருவருமே.
டெல்லியின் துணை நிலை ஆளுநர் மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது அதேபோல் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மாநில அரசு துணை நிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விளக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் 9 தீர்ப்புகள் படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போல அதிகாரங்கள் கிடையாது, எனினும் அரசியல்சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் தீபக் மிஷ்ரா கூறினார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளின் மீது துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என கூறிய தலமை நீதிபதி மக்கள் நல முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் ஒரபோதும் முட்டுகட்டை இடக்கூடாது என தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு முழு சுதந்திரமாக, தன்னிச்சை முடிவுகளை எடுக்க முடியாது எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்ததாக இருக்கும் எனவும் தீபக் மிஷ்ரா தீர்ப்பு எழுதினார்.
அரசியல் சாசனத்தை மதிக்காமல், துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் ஆலோசனையையுல் பெற்று எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
பின்னர் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி சந்திரசூட், இங்கு யாரும் நான் தான் தலைவர் என்ற நிலை கிடையாது, இருவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும், மாநிலத்துக்கான முழு அதிகாரம் மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கே உள்ளது , ஆனால் டெல்லி சிறப்பு அந்தஸ்தில் உள்ளதால் அதிகாரம் அமைச்சரவை, துணை நிலை ஆளுநருக்கும் இருதரப்பினரிடையே உள்ளது என தீர்ப்பு வழங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முடிவுகளில் அனைத்து விசயங்களிலும் துணைநிலை ஆளுநரின் தலையீடு இருக்கக்கூடாது, அதிகார வரம்பு மீறல் இருக்கும் சில விசயங்களில் மட்டுமே தலையிடலாம்.
மக்களுக்கு பதில் சொல்லவேண்டியது , மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அமைச்சரவை சகாக்கள் தான் , அதனை உணர்ந்து துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்பெழுதிய நீதிபதி சந்திரசூட் துணைநிலை ஆளுநர் அரசின் நடவடிக்கைகளை தடுக்க நினைக்கக்கூடாது, அவர் அரசுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும் விளக்கினார்.
ஆளுநரோ, முதல்வரோ தன்னை தன்னாதிகாரம் கொண்டவராக நினைத்துக்கொள்ள கூடாது, அனைவரும் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டவர்கள்பென்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்: என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அசோக் பூஷண்.
அனைத்து நீதிபதிகளும் டெல்லி மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியதால் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
டெல்லியின் காவல்துறை, நிர்வாக அதிகாரிகள் மாற்றம், பொது அமைதி, ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது, இதில் தலையிடும் வகையில் மாநில அரசு செயல்பட்டால் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும், குடியரசு தலைவர் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் கொண்டு செல்ல வேண்டும், மற்றப்படி மக்கள் நல திட்ட அனுமதிக்க துணை நிலை ஆளுநரே சொந்தமாக அனுமதி வழங்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு துணை நிலை ஆளுநருக்கு பின்னடைவாகவும், டெல்லி அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. துணை நிலை ஆளுநர் மாநில அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டையிடாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது டெல்லி துணை ஆளுநர் மட்டும் இன்றி புதுச்சேரி உள்ளிட்ட மற்ற துணை நிலை ஆளுநர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









