இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, ஏர்வாடி, கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பேச்சாலை மீன்பிடி சீசன் தொடங்கும். இது ஒரு படகுக்கு அதிகபட்சம் 10 டன் வரை கூட சிக்கும்.
இந்த மீன்களை கேரள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் இதனை கொண்டு மீன் எண்ணெய் தயாரிப்பதாலும், கேரள மக்கள் இதனை விரும்பி உண்பதாலும் கேரளாவில் இந்த மீனுக்கு கடும் கிராக்கி உள்ளது. பேச்சாலை மீன் அதிக சுவையாக இருக்காது என்பதால் பேச்சாலை மீனை தமிழக மக்கள் சாப்பிடுவதில்லை. இதனால் இங்கு பிடிபடும் மீன்களை கேரளாவிற்கு லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.
அவ்வாறு லாரிகளில் கொண்டு செல்லப்படும் மீன்கள் ராமநாதபுரம் வழியாகவும், கிழக்கு கடற்கரைச்சாலை வழியாகவும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மீன்களை ஐஸ் பெட்டிகளில் அடைத்து செல்லும்போது, அதிலிருந்து வெளியேறும் எண்ணெய் பசை போன்ற ஒருவித திரவம் சாலைகளில் வடிந்து கழிவுநீர் போல் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் லாரிகளில் இருந்து வடியும் வழுவழுப்பு தன்மை உடைய கழிவு நீரால் லாரியின் பின்புறம் செல்லும் டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர் மேலும் காற்றின் வேகத்தில் தொடர்ந்து செல்லும் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது கழிவுநீர் சிந்தி துர்நாற்றம் வீசுவதுடன், ஆடைகளில் படும் துர்வாடை காற்று சகிக்க முடியாத அளவிற்கு ஆடையை துவைத்தாலும் போவதில்லை. துர்வாடை அதிலேயே தங்கி விடுகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சாலை மீனை ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மாவட்டத்தில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ஏர்வாடி போன்ற புனித தலங்களுக்கு ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். இந்த துர்நாற்றத்தை தாங்க முடியாமல் யாத்ரீகர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுற்றுப்பகுதிகளில் ஈ மற்றும் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே டெங்கு, மர்ம காய்ச்சல் என மாவட்ட மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களின் நலன் கருதி பேச்சாலை மீன் ஏற்றிச் செல்ல தடை விதிக்க வேண்டும். அல்லது பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேச்சாலை மீன் ஏற்றிச் செல்ல தடை விதிக்க வேண்டும். அல்லது உரிய முறையில் கழிவு நீர் சாலைகளில் சிந்தாமல் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









