ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம் வேதாளை, களிமண்குண்டு, கீழக்கரை, நரிப்பையூர் உள்ளிட்ட தெற்கு கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் நாட்டுப்படகில் கடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்கள் சாலை மார்க்கமாக கடத்தி வந்து பின்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதற்கும், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வரும் கடத்தல் தங்கத்தை சாலை மார்க்கமாக திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லவும், ஹவாலா பணத்தை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்ல கிழக்கு கடற்கரை சாலை பயன்படுத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த ஒரு வார காலமாக சுங்கத்துறையினர் ராமநாதபுரம் புறநகர் பகுதி கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, பொக்கரனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனையின் போது சரக்கு வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களை நிறுத்தி அதனை முழுமையாக சோதனை செய்து வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்டவைகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கீழக்கரை பேருந்து நிலையத்திலிருந்து கடற்கரை செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றதால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் கையில் வைத்திருந்த பார்சல் ஒன்றை சாலையில் வீசி விட்டு சென்றனர்.
இதையடுத்து அந்த பார்சலை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்ததையடுத்து அதனை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடையிட்டு பார்த்தபோது அதில் 40 கிலோ உயர் ரக கஞ்சா இருந்ததுள்ளது.
உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள உயர்ரக கஞ்சா கிலோ 1 லட்சம் ரூபாய் என ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.