பெரியநாயக்கன்பாளையத்தில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் மக்களின் அடிப்படை வசதிகளை கோரி பெரிய அளவில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சாலை, சாக்கடை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். பழுதடைந்த சாக்கடைப் பாதைகள் குப்பை மற்றும் கழிவுநீரால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் ரோடும் ஜடல்நாயுடு வீதியும் இணைக்கும் பழுதடைந்த தரைப்பாலம் பல ஆண்டுகளாக அபாய நிலையில் உள்ளதால், அதற்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரினர்.

அத்துடன் பிரதான சாலைகளில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி, நவீன கழிவுநீர் மேலாண்மை முறைகளில் அவை அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தை சீரமைத்து, சர்வீஸ் ரோடுகளை விரிவாக்கி, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அரசு தலையிட வேண்டும் என்றும் கோரினர். மேலும், சாலையோரத்தில் உள்ள மதுபானக் கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்; சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காக தனித்த வியாபார வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பெரியநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை அடிப்படை வசதிகள் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மேம்படுத்தி கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.

அத்துடன் அனைத்து வார்டுகளிலும் சாலைகளை சீரமைத்து பெயர்பலகைகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்காக்கள், ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். கோகுலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்துக்கு கவுன்சிலர் என். சிவராஜன் தலைமை தாங்கினார்.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் பெரியநாயக்கன் பாளையம் மக்களின் அடிப்படை தேவைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப் பட்டுள்ளன. மக்கள் வரி கட்டியும் அடிப்படை வசதிகளை இழந்து வருகிறார்கள். தமிழக அரசும் பேரூராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இறுதியாக ஜடல்நாயுடு வீதி கிளைச் செயலாளர் ஆர். கருப்புசாமி நன்றி கூறியதுடன், மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் உற்சாகக் கோஷங்களுடன் நிறைவடைந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!