அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி: CPI(M) செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!

மாநில அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவது வழக்கம். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், உரையை படிக்காமலும், வழக்கம்போல் தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்று பிரச்சனையை எழுப்பியும் வெளியேறியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.அவையின் மரபுகளை மதித்து நடந்து கொள்வதுதான் ஆளுநருக்கு அழகே தவிர, அவையை அவமதிப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அமைச்சரவை தயாரித்து கொடுக்கும் உரையை படிப்பதுதான் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை. ஆனால், வழங்கப்பட்ட உரையை குறைசொல்லி, படிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு அவருக்கு உரிமையில்லை. எனவே, அரசியல் சாசன கடமையை வேண்டுமென்றே நிறைவேற்றாமல், தொடர்ந்து மாநில அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.ஆளுநர் வாசிப்பதற்கென்று தயாரிக்கப்பட்ட உரையில், தமிழ்நாடு அரசு இதுவரை நிறைவேற்றியுள்ள பல்வேறு வாக்குறுதிகள், சமூக நல திட்டங்கள், மாநில அரசின் சாதனைகள், மனைப் பட்டா வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆசிரியர் – அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காதது, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டை போடுவது, மாநில உரிமைகளை பறிப்பது என ஒன்றிய பிஜேபி அரசின் தமிழகத்திற்கு விரோதமான செயல்பாடுகள் அழுத்தமாககுறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!