குற்றாலத்தில் சாரல் திருவிழா; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் 16.08.2024 முதல் 19.08.2022 வரை ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள குற்றாலம் சாரல் திருவிழாவின் துவக்க விழா 16.08.2024 அன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தென்றல் தவழும் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சாரல் விழாவிற்கு வருகை தந்திருக்கும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும். பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாரல் திருவிழா நமது மாவட்டத்தில் ஒரு முக்கிய பெருவிழா. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக I LOVE COURTALLAM Selfie point அமைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை நமது விருந்தினர்கள் போல் மரியாதையுடனும், அன்புடனும் நடத்த அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சாரல் விழா நிகழ்ச்சிக்காக அரும்பாடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும், நன்கொடை வழங்கிய நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கென்று பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். தென்காசி மாவட்டம் குற்றாலம் இயற்கை சூழ்ந்த இடம். இங்கு பழைய குற்றால அருவி, புதிய குற்றால அருவி மற்றும் ஐந்தருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி என பல்வேறு அருவிகள் நிறைந்து காணப்படுகின்றன. குற்றாலம் இயற்கையாக அமைந்துள்ள அருவி. இங்கு குளிப்பதால் பல்வேறு நோய்கள் தீர்கின்றன. இங்கு வரும் மக்கள் சந்தோசமாகவும், மன நிம்மதியுடன் குற்றாலச் சாரலினை அனுபவித்து விட்டுச் செல்கின்றனர். இங்கு குற்றாலச்சாரல் விழா 16.08.2024 முதல் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. மக்கள் அனைவரும் சாரல் திருவிழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சியாக மங்கள இசையுடன், கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், இடைகால் மற்றும் சிந்தாமணி பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சியும், பொள்ளாச்சி கண்ணாடி வெண்புறா குழுவினரின் ஜிக்காட்டம் நிகழ்ச்சி, நெல்லை ஸ்ரீவித்யா நாட்டிய மன்றத்தினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, சிவகாசி வெண்மணி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, கலைசுடர் மணி நாமக்கல் வே.பிரவு வழங்கும் கிளாரினட் இசை நிகழ்ச்சி, சன்டிவி புகழ் கவிதா ஜவஹர் தலைமையிலான மாபெரும் சிந்தனை பட்டிமன்றம், கேரளா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் விஷ்ணுசரண் கலந்து கொள்ளும் தூத்துக்குடி யாழிசை ஆர்கெஸ்ட்ரா வழங்கும் திரைப்பட மெல்லிசை மற்றும் தென்காசி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் குடும்ப வன்முறை, குழந்தைத் திருமணம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த காணொளி காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில் கொழுகொழு குழந்தை போட்டி நடைபெற்றது. 62 குழந்தைகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் ஒன்பது முதல் 12 மாத குழந்தைகளின் எடை உயரம் ஊட்டச்சத்து நிலை, வளர்ச்சி படிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவர் சரவணன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலகரம் மற்றும் மருத்துவர் பாண்டித்துரை (ஆர்.பி.எஸ்.கே) நேரடி பரிசோதனையிலும் தேர்வான குழுந்தைகளில் முதல் பரிசு ரூ.5,000, இலத்தூரை சேர்ந்த மகேஷ், பிச்சையா தம்பதியினரின மகளான இன்சிகா பானுவுக்கும், இரண்டாம் பரிசு ரூ.3,000 சாம்பவர் வடகரையைச் சேர்ந்த ராஜா, முத்துச்செல்வி அவர்களின் மகனான காளை ராஜாவிற்கும், மூன்றாம் பரிசு ரூ.2000 சாம்பவர் வடகரையைச் சேர்ந்த சொரிமுத்து, ஜெயகிருஷ்ணலெட்சுமி அவர்களின் மகளான ஜெய விசாகாவிற்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இரா.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் அ.வில்லியம் ஜேசுதாஸ், உதவி இயக்குநர் (மண்டல கலை பண்பாட்டு மையம், திருநெல்வேலி), வ. கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தி. உதயகிருஷ்ணன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!