குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க் கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.






இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக அரங்கு அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் குறித்த மலர் மற்றும் காய்கறிகளால் ஆன உருவ அமைப்புகள் மற்றும் அழகிய வண்ணமயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பழங்கள் காய்கறிகள் மற்றும் மலர்களைக் கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பலவகைப்பட்ட உருவ அமைப்புகளும் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றாலம், ஐந்தருவி அரசு சுற்றுச்சூழல் பூங்கா “தோட்டக்கலைத் திருவிழா மலர்க்கண்காட்சியில் மா, பலா, வாழை, அன்னாசி, எலுமிச்சை, ஆப்பிள், செவ்வாழை, ஆரஞ்சு, மாதுளை ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட வண்ண மலர்களான ரோஜா, கார்நேசன், சம்மங்கி. துளிப், அந்தூறியும், ஜின்ஜெர் லில்லி, செவ்வந்தி, ஹெலிகோனியா, ஆர்க்கிட்ஸ், Bird of paradise போன்ற மலர்களைப் பயன்படுத்தி 8 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட அழகிய பட்டாம்பூச்சி வடிவம் மற்றும் குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரிவடிவம் 7 அடி உயரத்திலும் 3 அடிஅகலத்திலும், பார்பி பொம்மை வடிவங்கள் மற்றும் எழில்மிகு மலர்களால் ஆன மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கேரட், முள்ளங்கி, கத்தரி, வாழைப்பூ போன்ற காய்கறிகளால் தெய்வப்புலவர் அய்யன் திருவள்ளுவர் உருவம் நின்ற நிலையில் 7 அடி உயரம் 3 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், கடுகு. கசகசா, மல்லி, ஜாதிபத்திரி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு ஆகிய 14 வாசனை மற்றும் நறுமணப் பொருட்களால் தெய்வப்புலவர் ஐய்யன் திருவள்ளுவர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சேனைக்கிழங்கு, பூசணிக்காய், குடைமிளகாய், வாழைப்பூ, கேரட் போன்ற காய்கறிகளை கொண்டு 12 அடி நீளமும் 3 அடிஅகலமும் கொண்ட டிராகன் மற்றும் அழகிய வண்ணமயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பல வகையான பழ ரகங்கள், காய்கறிகள், வாசனைப் பயிர்கள் மற்றும் மலர் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் உழவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட்டது. நவீன தோட்டக்கலைத் தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் மண்ணில்லா விவசாயம் மற்றும் செங்குத்து தோட்டம் ஆகியவற்றின் மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி குறித்த முகாம் நடைபெற்றது. இம்மலர் கண்காட்சிக்கு குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 50 எனவும், சிறியவர்களுக்கு ரூ, 25 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தி. உதயகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் சுபாஷினி, சங்கரவேல், கோபாலன் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் விவேக் மற்றும் செல்வி. மகாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.