தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததோடு நகராட்சி ஊழியரை மிரட்டிய இரண்டு பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைத்தெரு தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் அதற்குரிய பணத்தையும் கட்டாமல் நகராட்சி தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளார்.
இதை அறிந்த சங்கரன்கோவில் நகராட்சி ஊழியர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்ற போது மாரிமுத்து (வயது 36) மற்றும் டைட்டஸ் ஆதித்தன் (வயது 47) இருவரும் நகராட்சி ஊழியர் சிவகுமாரை தரக் குறைவாக திட்டியதோடு அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது பற்றி சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் நகராட்சி ஊழியர் சிவக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேலு முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் குற்றவாளி மாரி முத்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 1700 அபராதமும், டைட்டஸ் ஆதித்தனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூபாய் 700 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.