கடையநல்லூர் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் ராமர் என்பவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் பேசி முடித்து கடந்த 04.09.2016 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. தனியாக குடியிருந்து வந்த நிலையில், வேல் மதியின் கணவர் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 12.04.2018 இரவு ராமர் மற்றும் அவரது மனைவி வேல்மதிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமர் வேல்மதியின் கழுத்தில் தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இது பற்றி வேல்மதியின் தாய் வெள்ளதாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மனோஜ் குமார் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த ராமருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.