போதையில் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்தனர்..!

மது போதையில் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் 8 பேருக்கு கோர்ட் வழங்கிய நூதன தண்டனையை நிறைவேற்றும் விதமாக, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை அவர்கள் சுத்தம் செய்தனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்த 8 மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் மது போதையில் கல்லூரிக்கு வந்துள்ளனர்.இவர்களின் ஒழுங்கீன நடவடிக்கையை கண்டித்த கல்லூரி நிர்வாகம், அவர்களை இடைநீக்கம் செய்ததுடன், அவர்களின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கும் அனுமதி மறுத்தது.இதை எதிர்த்து அந்த 8 மாணவர்களும், ‘தங்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்’ என, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், “மாணவர்கள், போதையில் வகுப்பறைக்குள் வந்தது தவறுதான். அதை உணர்ந்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட்டால், எதிர்காலம் பாதிக்கப்படும்.எனவே, மாணவர்கள் 8 பேரும் வரும் சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தப்படுத்தும் பணி, அங்கு வரும் பொதுமக்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மாணவர்களின் இந்தப்பணியை, விருதுநகர் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர், கல்லூரி உதவி பேராசிரியர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதன்படி, சுதந்திர தினமான  (15ம் தேதி) காலை 9 மணிக்கு 8 மாணவர்களும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு வந்தனர். 10 மணிக்கு, நினைவு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். அத்துடன், அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததுடன், ‘இனி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட மாட்டோம்’ என உறுதியளித்தனர்.மாணவர்கள் மேற்கொண்ட பணிகளை, விருதுநகர் டவுன் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!