தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சீமானை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழக மக்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அத்தகைய போராட்டங்களின் விளைவாகவே பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.அரசியலில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மலிவான, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஊடக வெளிச்சம் பெற்று வருகிற சீமானை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடைமுறை சாத்தியமே இல்லாத கருத்துகளை கூறி, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிற சீமானின் அரசியலுக்கு முடிவுகட்டுகிற காலம் நெருங்கி விட்டது. எத்தனை தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் ஒரே ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அது சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும்.வாய்க்கு வந்தபடி அவர் உளறுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதனாலேயே தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள் முனையளவு கூட இவர் போன்றவர்களால் சிதைக்க முடியாது. எனவே, சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









