தீபாவளி பண்டிகையின் போது அகல் விளக்குகளை தயார் செய்யும் ஒரு குடும்பத்தினரை சந்தித்து பேசிய வீடியோ ஒன்றை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் மற்றும் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்தும், மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மண் பாண்டங்களை தயார் செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினேன். அவர்களின் வேலையை அருகில் இருந்து பார்த்து, கற்றுக் கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் புரிந்து கொண்டேன்.
நாம் பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். ஆனால் அவர்களோ, கொஞ்சம் பணம் சம்பாதிக்க தங்கள் கிராமம், நகரம், குடும்பம் ஆகியவற்றை மறந்து உழைக்கிறார்கள். மட்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணில் இருந்து மகிழ்ச்சியை உருவாக்குகிறார்கள். பிறருடைய பண்டிகைகளுக்கு அவர்கள் ஒளி ஏற்றுகிறார்கள். அதே சமயம் அவர்களால் ஒளியில் வாழ முடிகிறதா? தீபாவளி என்பது வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை என்ற இருளை நீக்கும் ஒளி ஆகும். மக்களின் திறமைக்கு உரிய அங்கீகாரமும், மதிப்பும் அளிக்கும் வகையில் ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அனைவரின் வாழ்விலும் செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அன்பை கொண்டு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.