சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி: எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு, காவல்துறையின் பணியை செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியின் தலையீடே காரணமாக உள்ளது.
பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இன்றைய தமிழ்நாடு மாறியுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதிலும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. உத்திர பிரதேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் போல, திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் காவல் துறை கண் முன்பாகவே ஒரு தலித் சகோதரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு அதன் பின்னணியில் எந்தவொரு கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்தே சட்டம்- ஒழுங்கு சீர்கேடு எந்தளவிற்கு உச்சத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
புதுக்கோட்டையில் மணல் கடத்தலுக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜகுபரை மணல் கொள்ளை மாஃபியாக்கள் லாரி ஏற்றி படுகொலை செய்துள்ளனர் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியிலும் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் குறிப்பாக இளம் தலைமுறையினர் இடையே போதைப்பொருட்கள் புழக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. போதை பொருட்களை விற்போரை தடுத்து நிறுத்துவதில் திமுக அரசு முழு தோல்வியடைந்துள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகரிக்கும் என்பது மக்களிடையை பரவலாக பேசப்படும் ஒன்றாக உள்ளது. அதற்கேற்றார் போல் ஆங்காங்கே நடைபெறும் தொடர்ச்சியான குற்ற சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
சில சம்பவங்களில் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் திமுக அரசு முற்படுகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, குற்றவாளிகளை பாதுகாப்பது தான் தொடர்ச்சியான குற்ற சம்பவங்கள் நடைபெற அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என்பதை மக்களும் வெளிப்படையாக பேச தொடங்கி விட்டனர். சட்டம்- ஒழுங்கு காவல் துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் நேரடியாக என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என ஸ்டாலின் கூறுகிறார். இதை மக்களை பாதுகாக்க தான் சொல்கிறார் என நினைத்தோம். ஆனால் நடக்கும் தொடர் குற்ற சம்பவங்களை பார்க்கும் போது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தான் முதலமைச்சர் அப்படி சொன்னாரோ என எண்ணத் தோன்றுகிறது. காவல் துறை தன் பணியை செய்ய விடாமல் தடுப்பது ஆளும் கட்சியின் தலையீடு தான், இதுவே சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய கட்சிகள் எல்லாம் கூட்டணி (அ)தர்மத்திற்காக வாய் மூடி மவுனம் காக்கின்றனர்.
கேள்விகளை எழுப்பும் எதிர் கட்சிகளை, சமூக ஆர்வலர்களை கொலை செய்வது, கைது செய்வது உள்ளிட்ட அடக்குமுறைகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
இவற்றையெல்லாம் மக்கள் சாதாரணமாக கடந்து போய்விடுவர என திமுக அரசு தப்பு கணக்கு போடுகிறது. இதற்கு மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பர்.
முற்றிலும் தோல்வியடைந்த திமுக அரசு, சட்ட ஒழுங்கை மீண்டும் காப்பாற்றி, கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், அனைத்து குற்ற சம்பவத்திலும் காவல் துறையை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளும் கட்சி தலையீட்டை தடுத்து நிறுத்தவும், இத்தகைய தொடர் குற்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், மக்களை பாதுகாப்பதிலும் முன்னுரிமை செலுத்த வேண்டும் என தோல்வியடைந்த திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ரியாஸ் கான்,
மாவட்ட தலைவர்,
SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.
You must be logged in to post a comment.