இராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் கையாளும் முறை குறித்து முதன்மை தேர்தல் பயிற்றுநர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 784 இடங்களில் 1,367 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக 3,310 மின்னணு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,800 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் ஆகியவற்றில் முதல்நிலை சோதனை நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதன்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்காக மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 784 இடங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
இவ்விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர் தலைமையில் தலா 7 குழுக்கள் வீதம் 28 குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் முதன்மை பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விபேட் ஆகியவற்றை கையாளும் முறை மற்றும் செயல்பாடு குறித்து தெளிவு ஏற்படுத்தும் வகையில் இப்பயிற்சி நடத்தப்படுகின்றது.
இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அலுவலர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தி தங்களது பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முறையே மாதிரி வாக்குப்பதிவு நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.மதியழகன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஷேக் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.கண்ணபிரான் உட்பட அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் முதன்மை பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.





You must be logged in to post a comment.