இராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறைதீர் நாள் கூட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் அப்துல் நாசர் ஜெய்லானி, கோபிநாத் முன்னிலை வகித்தனர். கீழக்கரை ,மேல முந்தல், கீழமுந்தல் கடல் பகுதிகளில் இரட்டை மடி மீன்பிடி, விசைப்படகுகளின் கரையோர மீன்பிடியை தடுக்க வேண்டும் என நாட்டுப் படகு மீனவர்கள் வலியுறுத்தினர். மீன்பிடியின் போது ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தென் கடல் பகுதியிலும் வாரம் மூன்று நாள் மீன்பிடி முறையை ஒழுங்குபடுத்தி நாட்டுப்படகுகளுக்கு டோக்கன் முறை அமல்படுத்த வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில், 237 கி.மீ நீளம் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் 180 மீனவ கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 4,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீனவர் குறை தீர் கூட்டம் தடந்தது. இனி வரும் காலங்களில் மாதந்தோறும் மீனவர் குறை தீர் கூட்டம் நடத்தப்படும், என்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதி மீனவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை மனு வழங்கினர். கடல் விபத்தில் மரணமடைந்த தேவிபட்டினம் மீனவர் குடும்பத்திற்கு விபத்து காப்பீடு திட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மண்டபம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஜாகீர் உசேன், காதர் முகைதீன், செய்யது சுல்தான், அப்துல் ஹன்னன், செல்வக்குமார், மாடசாமி, ராமேஸ்வரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தேவதாஸ், போஸ், சேசு, கருணாமூர்த்தி, பனைக்குளம் வேல்ச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்



You must be logged in to post a comment.