இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி IV க்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்பொழுது தொகுதி-IV க்கான போட்டி தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நோக்கம் தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் எளிதாக தேர்வெழுதி பயன்பெற வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் இப்போட்டித் தேர்வில் பங்கேற்கவுள்ள நீங்கள் ஆர்வமுடன் படிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் விடாமுயற்சி தான் வெற்றியை பெற்று தரும். ஏதோ விண்ணப்பித்தோம், தேர்வு எழுதினோம் என்றில்லாமல் நன்றாக படித்து தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி எனும் இலக்கை பெற்று பயன்பெற வேண்டும் என்றார். மேலும் மாவட்டத்தில் இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு பெற்ற அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி வழங்கி வருகிறார்கள். எனவே போட்டி தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன்பெற்றிட வேண்டும் என தெரிவித்து பயிற்சியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு பாடத்திட்ட குறிப்புகள் அடங்கிய கையைட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் , இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சுந்தரலிங்கம் , இராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.