தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்காசி மாவட்டத்திற்கு 10 முத்தான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்.
1. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
2. சங்கரன்கோவில், மேலநீலித நல்லூர் பகுதிகளில் இருக்கின்ற பெண்களுக்கு, அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தின் நீர்த் தேவைகளை நிறைவு செய்ய, ரூ.52 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
3. ரூபாய் 2 கோடியில் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
4. ரூபாய் 6 கோடியில் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
5. சிவகிரி, கடையநல்லூர், சங்கரன் கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.
6. ரூபாய் 4 கோடியில் தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் இருக்கும் கடனா அணை சீரமைக்கப்படும்.
7. கடையநல்லூர் வட்டத்தில், வரட்டாறு பாசன அமைப்பின் கீழ் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் மேம்படுத்தப்படும்.
8. செங்கோட்டை வட்டத்தில், அடவி நயினார் கோயில் அணைத் திட்டத்தின் கீழுள்ள அணைக் கட்டுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் சீரமைக்கப்படும்.
9. ரூபாய் 2 கோடியில் வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் மாறாந்தை கால்வாய் சீரமைக்கப்படும்.
10. ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு குடிநீர் மற்றும் பிற வசதிகள் செய்து தரப்படும்.
மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 587 கோடியே 38 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,44,469 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரிய சாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ராபர்ட் புரூஸ், டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, அப்துல் வஹாப், சதன் திருமலைக் குமார், பழனி நாடார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

