ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசினார். நெல்லையில் நடைபெறும் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருநெல்வேலியில் நடந்த எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கோவில்பட்டியில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசும்போது, நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அங்கிருந்து இங்கே மேடை வந்தவன். அங்கே வெயிலில் நிற்பவர்களுக்கு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவன். உழைப்பாளிகளின் நன்கு உணர்ந்தவன். மற்ற கட்சி தலைவர்களை போல் அல்ல. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் அங்கு உழைக்கின்ற மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள், அவர்களது உழைப்பினால் பிழைப்பு எப்படி உள்ளது என்பதை உணர்ந்தவன். ஆகவே இந்த அரசை எப்படி வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன்.
நான் ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். அதிமுகவில் அதிக முறை போட்டியிட்ட பெருமை எனக்கு உண்டு. சிலர் எண்ணினார்கள் இந்த அரசு எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்று. 10 நாட்கள் தாக்குப் பிடிக்குமா, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வரை தாக்குப் பிடிக்குமா, மானிய கோரிக்கை நடக்கும் வரை தாக்குப் பிடிக்குமா என்று சொன்னார்கள். இப்போது இரண்டு ஆண்டுகாலம் உங்களது துணையோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் அரசியல் பாடம் படித்து உள்ளோம். அதிமுகவில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு சேவை செய்வதற்காக பிறந்தவர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செலவில் உள்ள மாவீரன் பூலித்தேவன் அரண்மனை ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை புதுப்பிக்க ரூ.ஒரு கோடியில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ் மொழிக்கு அரும்பணியாற்றிய இஸ்லாமிய கவிஞர் உமறுபுலவர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடி வருகிறது. தமிழ் பத்திரிகை உலகில் புரட்சி ஏற்படுத்தி பாமர மக்களையும் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய சி.பா.ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் தலைவருமான தலைசிறந்த தொழிலதிபருமான சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் ரூ.1.34 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமிகளின் நினைவை போற்றும் வகையில் ரூ.20 லட்சத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.297 கோடியில் 4வது பைப் லைன், கோவில்பட்டிக்கு ரூ.86 கோடியில் 2வது பைப் லைன் திட்டம் ஆகியவை கொண்டு வந்தது அதிமுக அரசு தான். தூத்துக்குடியில் புதிதாக கயத்தாறு, ஏரல் ஆகிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் தொகுதியில் உடன்குடியில் ரூ.2,400 கோடியில் அனல் மின் நிலையம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் ஆகிய பணிகளை மேற்கொண்டது அதிமுக அரசு தான்.
தைத்திருநாளை அனைத்து இல்லங்களில் எழுச்சியுடன் கொண்டாடுவதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கினோம். ஆனால், திமுகவை சேர்ந்தவர் அவரது வழக்கறிஞரை அனுப்பி தடையாணை பெற முயற்சித்தனர். அதையும் முறியடித்து, நீதியை நிலைநாட்டி, அனைத்து மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினோம். இது மக்களுடைய அரசு. இது தொண்டன் ஆளும் அரசு. தலைவன் ஆளும் அரசு அல்ல. இங்குள்ள அத்தனை மக்களுடைய கூட்டணியோடு ஆளுகின்ற அரசு இந்த அரசு.
இந்த அரசை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். அது குடும்ப அரசியல். அந்த குடும்ப அரசியலில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பதவிக்கு வரமுடியும். சாதாராண தொண்டன் பதவிக்கு வர முடியாது. ஆனால், அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் விஸ்வாசமாக கட்சிக்கு உழைத்தால் எதிர்காலத்தில் அவருக்கு பதவி கிடைக்கும். எங்களது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து தான் இன்றைக்கு அமைச்சராக உள்ளனர். ஏன், முதலமைச்சராகிய நான் கூட சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாய பணியில் ஈடுபட்டு இன்றைக்கு இங்கு வந்துள்ளேன். தொண்டர்களை மதிக்கக்கூடிய இயக்கம் அதிமுக. ஏழை, எளியவர்களுடைய இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்துக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அனைத்து கட்சியினரும் உங்களை தேடி வருவார்கள். திமுகவினர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால், தமிழகத்துக்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சியில், அமைச்சராக இருக்க வேண்டும். மாநிலத்திலே அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் மந்திரியாக இருக்க வேண்டும். அது தான் அவர்களது முன்னேற்பாடு. ஆனால், அதிமுக அப்படியல்ல. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் சரி, மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் சரி மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களை தான் நாங்கள் உருவாக்குவோம்.
நாடாளுமன்ற தேர்தலோடு ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் இடைத்தேர்தலும் வரும். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். நாடாளுமன்ற வேட்பாளரையும் வெற்றி பெற செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய செல்வாக்கால், தமிழ்நாடு முழுவதும் பம்பரமாக சுற்றி, மக்களை சந்தித்து, மக்களுடைய ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த வகையில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கினார். ஆனால், அவர்கள் இருவரும் துரோகம் செய்து விட்டு சென்று விட்டனர். ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்றால், மக்கள் வாக்களிக்க வேண்டும். இங்குள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தால் தான் சட்டமன்ற உறுப்பினராக முடியும். அதையெல்லாம் மறந்து விட்டு, யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு, டி.டி.வி. தினகரனின் பேச்சை கேட்டு இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இரண்டும் பேரும் சதி செய்தார்கள். இன்று வீதியில் நிற்கின்றனர். என்றைக்கும் தர்மம் தான் வெல்லும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தயாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ,சண்முகநாதன், மாவட்ட எஸ்.பி.முரளிரம்பா அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாhக்கண்டேயன், மோகன், சின்னப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோட்டாட்சியர் விஜயா, டி.எஸ்.பி.ஜெபராஜ், தாசில்தார் பரமசிவம், நகராட்சி ஆணையர் அட்சையா மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












