தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன், அறிவு, படைப்பாற்றல், எழுத்தாற்றல், வாசிப்பு திறன், மொழி உணர்வு உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் சிறார் இதழ்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழ்களை படித்த தென்காசி மாவட்ட பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தோண்ட தோண்ட ஊற்று நீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்க படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் அறிவு சார்ந்த திறன்களை வளர்த்து அவர்களை ஊக்குவித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உதவும் வகையில் வெளியிடப்பட்டது தான் புது ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு சிறார் இதழ்கள். தமிழக கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான (4 முதல் 5 ஆம் வகுப்பு வரை), தேன்சிட்டு (6 முதல் 9 ஆம் வகுப்பு வரை) ஆகிய இரண்டு சிறார் இதழ்கள் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை பங்களிக்கவும், பல்வேறு பள்ளி அளவிலான போட்டிகளில் ஒரு பகுதியாக இருக்கவும், ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் உள்ள பலவிதமான உள்ளடக்கங்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, இவ்விதழ்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்காக கனவு ஆசிரியர் என்ற இதழை வெளியிடுகிறது. அதில் இன்போடெயின்மென்ட் (தகவல் மற்றும் பொழுதுபோக்கு), கல்வி தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான தகவல்கள் ஆகியவை இடம்பெறும். வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும், வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இணைந்து இந்த இதழ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் பங்களிக்கவும் கற்றுக்கொள்ளவும் முடியும்.
அறிவை விரிவு செய் அகண்டமாக்கு! என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்தைகளுக்கேற்ப புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை. பாடப்புத்தகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என கற்றலையும் கட்டாயமாக்கிக் கொண்டு, ஒரு வட்டத்துக்குள் ஆசிரியர்களும், மாணவர்களும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிறந்த இளைப்பாறலாக, பாடப்புத்தகங்களைத் தாண்டி வெளி உலகத்தை அணுகும் ஒரு பாலமாக அவர்களின் கைகளுக்குள் வந்தமர்ந்திருக்கின்றன இந்த மூன்று இதழ்கள். ஒவ்வொரு இதழுக்குள்ளும், இருமொழி தகவல் மற்றும் பொழுதுபோக்கு, தமிழகத்தில் கல்வித்துறையின் நிகழ்வுகள் குறித்த சிறப்பு அம்சங்கள், பகுதி வாரியாக மாணவர்கள் பங்களித்த படைப்புகள், காமிக்ஸ், வண்ண வார்ப்புகள், கலை மற்றும் கைவினை பற்றிய தகவல்கள், மாணவர்களுக்கான சிறுகதைகள், மாணவர்களுக்கான கவிதைகள் விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் பல் விளையாட்டுச் செயல்பாடுகள் ஆகியன உள்ளன. கனவு ஆசிரியர் என்ற இதழ் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு மாத இதழ். கல்வி, வாழ்க்கை, சமூகம், நலம், பொது என பல் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த இதழில், பள்ளி மேலாண்மைக்குழுவின் அவசியம், புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறைகள், மாணவர்கள் மற்றம் பெற்றோர்களுடன் ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் அறிவைத் தூண்டும் வகையில், ஆரோக்கிய துணுக்குகள், தொழில் நுட்ப அறிமுகம், பொது அறிவுத் தகவல்கள், சுவாரஸ்ய சம்பவங்களும், ஆசிரியர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் சிறுகதைகள், பார்க்கவேண்டிய சினிமா பற்றிய விமர்சனங்கள் கூட அடங்கியிருக்கின்றன.மேலும், இந்த இதழிலுள்ள சிறப்பு என்னவென்றால் இதில் பெரும்பாலான கதைகள், கட்டுரைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களேதான் எழுதுகிறார்கள். மேலும், கலை, சூழலியல் என சாதனை படைத்த அரசுப் பள்ளிகளின் கதைகளும் வெளியாகி, மற்ற ஆசிரியர்களை தங்கள் பள்ளியையும் முன்மாதிரிப் பள்ளிக்கூடங்களாக மாற்றியமைக்க நினைக்கும் வகையில் ஊக்கப்படுத்துகிறது இந்த கனவு ஆசிரியர் இதழ். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டிருக்கும் “ஊஞ்சல்“ இதழ் மாதம் இருமுறை வெளியாகும். முழுக்க மழலைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான மகிழ்ச்சிப் பாடல்கள், உயிரினங்கள் சொல்லும் சிறார் கதைகள், சித்திரக் கதைகள் என நிரம்பிக் கிடக்கின்றன. கலைத்திறனை வளர்க்கும் வகையில் ஓரிகாமி காகித மடிப்புக்கலை, ஓவியம் வரைதல் பயிற்சி மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் புதிர்கள் கண்டுபிடித்தல், விடுகதைகள், புதிய நூல்களின் அறிமுகம், ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு, பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், உயிரினங்கள் குறித்து சுவாரஸ்ய துணுக்குகள், கலை அறிவு என இரண்டையும் இந்த இதழ் பயிற்றுவிக்கிறது.
முக்கியமாக, இதழின் நடுப்பக்கத்தில் ‘மாணவர் படைப்புகள்” எனும் தலைப்பில், மாநிலம் முழுக்க உள்ள பல்வேறு அரசுப்பள்ளி குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்று சித்திரச்சோலையாக காட்சியளிக்கிறது. மேலும், மாணவர்களிடத்தில் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையிலான சமூக நல்லிணக்க கதைகள் இடம் பெற்று பிஞ்சிலே அமுதை ஊட்டும் நல் முயற்சியாக அமைந்திருக்கிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கானது தேன்சிட்டு” என்கிற மாதமிருமுறை இதழ். பதின்பருவ மாணவர்களுக்கு ஏற்றவகையில் அறிவியல் சார்ந்த கேள்வி பதில்கள், புதிர்கள், அறிவியல் சோதனைகள், தொல்லியல் வரலாறுகள், தலைவர்கள் வரலாறு, விளையாட்டுகள், ஆரோக்கியமான உணவு முறைகள், வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் என இதழ் முழுக்க பொது அறிவுச் சுரங்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வெளியுலக அறிவை இந்த இதழ் மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்துக்கு வெளியில் இருக்கும் உலகை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்மூலம் கவனித்தல், பேசுதல். படித்தல், எழுதுதல் ஆகிய கற்றலுக்கான திறன்களை மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இந்த இதழ்கள் கொண்டு சேர்க்கப்பட்டு மாணவர்கள் இந்த இதழை படிப்பதற்காகவே பிரத்யேகமாக நேரம் ஒதுக்கித் தரப்படுகிறது. இந்த இதழ்களை அடிப்படையாக வைத்து பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றது. மேலும், இதழில் மாணவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் வகையில் அவர்களின் ஓவியங்கள், கதைகள், கவிதைகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டு வரும் இவ்விதழ்கள் குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்ததாவது, மு.இம்ரான் (அச்சன்புதூர், அரசு தொடக்கப்பள்ளி): என் பெயர் மு.இம்ரான். நான் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் பெற்றோர் பெயர் L. முகமது ஷாஜகான், K. செய்யது அலி பாத்திமா ஆகும். எனக்கு மு.நபிஷா பேகம் என்கிற சகோதரி இருக்கிறார். சகோதரி அச்சன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மதிய உணவு இடைவேளையில் புது ஊஞ்சல் சிறார் இதழ் வாசிப்பதற்காக எம் பள்ளி தலைமை ஆசிரியர் வழங்குவார். நாங்கள் மூன்று மூன்று மாணவ மாணவியர்கள் குழுவாக அமர்ந்து அனைத்து பக்கங்களிலும் உள்ள படைப்புகளை வாசித்து வருகிறோம். உண்மையில் என் போன்ற மாணவர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் கிடைக்கிறது. மொழியறிவு படைப்பாற்றல், மொழியறிவு உணர்வு வளர்கிறது. நாமும் இது போன்ற படைப்புகளை தயாரிக்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. நானும் டாக்டர் அப்துல் கலாம் ஐயா குறித்து படைப்பு அனுப்பி உள்ளேன். அது புது ஊஞ்சல் இதழில் வெளியாகும் என்று நம்புகிறேன். உண்மைச் சம்பவங்கள், மொழியறிவு படைப்புகள், கவிதைகள், வண்ணப்படங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த இதழை வாசிப்பதன் மூலம் எனது வாசிப்புத்திறன் மிகவும் மேம்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மூலம் நான் பெற்று வரும் நல்ல செயல்களை அன்புடனும் பெருமையுடனும் நினைத்து நன்றி கூறுகிறேன். மகிழ்கிறேன்.
ந.சங்கரி (சிவகுருநாதபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி: என் பெயர் ந.சங்கரி நான் சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு பயின்று வருகிறேன். என் தந்தை பெயர் நயினார். அவர் கட்டிடம் அமைக்கும் தொழில் செய்து என்னையும் என் தம்பியையும் படிக்க வைக்கிறார். எனது அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது அறிவியல் ஆசிரியர் கவிதா அவர்கள் எனக்கு தேன் சிட்டை பற்றி எனக்கு அறிமுகப்படுத்தினார், தேன்சிட்டு படித்ததில் எனக்கு பிடித்த நூல் மாயமாகும் கண்ணாடிக் குவளை, மஞ்சள் விளையும் அந்தியூர் ஆகும். மாயமாகும் கண்ணாடிக் குவளை செயல்பாட்டை நான் செய்து பார்த்தேன். அதில் வெற்றியும் அடைந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மஞ்சள் விளையும் அந்தியூர் அந்த ஊரைப்பற்றி ஒரு சிறுவன் சிறப்பாக எழுதி இருந்தான். எங்களைப் போன்ற மாணவர்களை ஊக்குவிக்கவும் எங்களது தனித்திறன்களை வளர்த்து கொள்ளவும் இத்தகைய சிறப்பான இதழ்களை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.மேனகா (தென்காசி, அரசு (பொ) மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்) : என் பெயர் .மு.மேனகா. நான் 17:12.2012 தேதியிலிருந்து அரசு (பொ) மேல்நிலைப்பள்ளியில் (தென்காசி) பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். தேன்சிட்டு இதழுக்கான Organiser ஆக உள்ளேன். கனவு ஆசிரியர் இதழில் ஆசிரியர் படைப்புகள், வகுப்பு அனுபவங்கள், அவர்களது சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. அவை மிகவும் உபயோகமாக உள்ளது. ஆசிரியர்களின் மேம்பாடு கல்வி வாழ்க்கை, சமூக நலம், பொது உள்ளடக்கம், புதுமையான கல்வி கற்பிக்கும் முறைகள் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும். கனவு ஆசிரியர் இதழுக்கு எனது மனமார்ந்த நன்றி.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) இரா.ராமசுப்பிரமணியன்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










