இராமநாதபுரம், ஆக.18-
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் கலோனியர் பங்களா மைதானத்தில் மீனவர் நல சந்திப்பு மாநாடு நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும். 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரத்தில் இருந்த ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். இதனால் 1.79 லட்சம் பேர் பயன் பெறுவர். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும். ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி குமரி மாவட்டங்களில் பதிவு செய்த நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4, 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும். தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு, குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீன் பிடியின் போது காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது ரூ.1.70 லட்சத்திலிருந்து 2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க, படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தூண்டில் வளைவு அமைக்க நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு காரணமாக இப்பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. கடலோர மேலாண் திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் தூண்டில் வளைவு பணிகள் விரைவில் தொடங்குவோம்.
இந்த அறிவிப்புகள் மூலம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர் பயனடைவர் இதற்காக, ரூ. 926 கோடியே 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். மீனவர்களுக்கு அடுத்தடுத்து இது வழங்கப்பட இருக்கிறது. இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










