கமுதி பேரூராட்சியில் சாதி வேறுபாடுகள் காரணமாக தூய்மை பணிகள் பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாக்கு உட்பட்ட கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பணியிடங்களில் சாதி வேறுபாடுகள் நடைபெறுவதால் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்று வழங்கினர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 தூய்மை பணியாளர்கள் கமுதி பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடன் பணியாற்றும் குருதாம், ராமமூர்த்தி, மாரி, விஜயராகவன், காளீஸ்வரி, பாண்டீஸ்வரி ஆகியோர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் தூய்மை பணிகளில் ஈடுபடாமல், மாற்றுப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதனால் தூய்மை பணிகளுக்கு தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டு, நகரில் சுகாதார சீர்கேடுகள் உருவாகி வருகின்றன. சாதி அடிப்படையில் பணியைத் தவிர்ப்பது சட்டத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்றும், இந்த நடவடிக்கையால் மற்ற பணியாளர்கள் மீது அதிக பணி சுமை ஏற்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கமுதி வரசந்தை வளாகம், கடந்த 2 ஆண்டுகளாக வாரத்தில் ஒரே ஒரு நாள், செவ்வாய்க்கிழமை மட்டும் பயன்படுத்தப்படுகிறது. சந்தைக்கு நியமிக்கப்பட்ட காலாளி தேவி , அந்தப் பணியைச் செய்யாமல், பேரூராட்சி அலுவலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளுக்குப் பொறுப்பாளராக பணி செய்து வருகிறார். இதனால் சந்தை வளாகம் வெறிச்சோடி, சட்ட விரோதமாக மது அருந்தும் இடமாகவும், சில குற்றச்செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, பேரூராட்சிக்கு உட்பட்ட அலுவலக பணியாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தவிர்த்து மாற்றுப் பணிகளில் ஈடுபடுவது, பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படாமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளது எனவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனை தீர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.