தூய்மை பாரத விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஈஷா தன்னார்வலர்கள் இன்று (அக்.1) தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். குறிப்பாக, பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.
நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் ‘தூய்மை பாரதம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள தாணிக்கண்டி, முள்ளாங்காடு, மடக்காடு, பட்டியார் கோவில் பதி, கொளத்தேரி, முட்டத்துவயல், காந்தி காலனி, செம்மேடு, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். மேலும், அங்கு மக்களிடம் பொது இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய மேம்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர். இப்பணியில் ஈஷா தன்னார்வலர்களுடன் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பிரச்சாரத்தில் இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்களும் கலந்து கொண்டார். ஈஷாவின் சுகாதாரப் பணிகள் குறித்து அவர் கூறும் போது, “ஈஷா இன்று ஒரு நாள் மட்டுமின்றி தினமும் தூய்மை பணியை எங்கள் பஞ்சாயத்துடன் இணைந்து செய்து வருகிறது. ஈஷாவின் தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்களில் தினமும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். மேலும், அக்குப்பைகளை முறையாக தரம் பிரித்து, அப்புறப்படுத்தும் பணியையும், மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியையும் அவர்கள் செய்கின்றனர். சத்குரு அவர்களின் அறிவுறுத்தலின்படி, இதை ஈஷா தனது சொந்த செலவில் கிட்டதட்ட 5, 6 வருடங்களாக செய்து வருகிறது. சத்குருவும் ஈஷாவும் எங்கள் பகுதியில் இருப்பது எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்” என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









