சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்ததை அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் திரண்டனர்.
சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது. தள்ளுவண்டிகளில் மட்டுமே காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டது. காய்கறி விற்பனை மட்டுமே அங்கு நடைபெறும் என்றும் பூ மற்றும் பழ வியாபாரம், புதன் முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வந்தனர். ஆட்டோக்கள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் என ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டதால், நடந்தோ இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சில்லறை வியாபாரிகளுக்கு மாதவரம் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அவர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமலும், அரசு உத்தரவை மீறியும் மொத்த வியாபாரிகளே சில்லறை வியாபாரமும் செய்தனர்


You must be logged in to post a comment.