தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டி நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டி நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வாக்கு பதிவுக்கு பிறகு 45 நாட்களுக்கு மேல் வாக்கு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தேர்தல் அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறும் வகையில் உள்ளதால், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி எழிலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முற்றிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படாத நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!