தமிழக அரசின் சேவைகளை பெற செல்போன் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தமிழக அரசின் இ-சேவை பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து இ-சேவை மையங்களிலும் எதிர்வரும் மே 2 ஆம் தேதி முதல் அலைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு செல்பவர்கள், தங்களது கைபேசி எண்ணை கணினி பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப் படும். விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள 155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று கொள்ளலாம். விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும். எனவே, பொதுமக்கள் மே 2 ஆம் தேதி முதல் இ-சேவை மையங்களுக்கு செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு செய்து பயனடையலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!