கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்
கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் “அன்னை சாரதா நடமாடும் மருத்துவ முகாம்” என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் சங்கர் நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர் நந்தா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை, ஆலோசனை மற்றும் மருந்து வழங்கும் பணிகளை மேற்கொண்டனர்.
முகாமில் தன்னார்வலர்கள் கார்த்திகா, கண்ணன், தீலிப், நிரஞ்சன், சாய்கணேஷ் ஆகியோர் மருத்துவ குழுவுடன் இணைந்து முழு நேர சேவையை வழங்கினர்.
இந்த முகாமினை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் ஒருங்கிணைத்தார்
மேலும், மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தனர். சங்க நிர்வாகிகளில் தோழர்கள் பாஷா, ஷானவாஸ், பண்ணாரி, குர்பானி, நாகராஜ் மற்றும் சொப்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளையும், உடல் நல ஆலோசனைகளையும் பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சி, சமூகத்தில் அத்தியாவசிய பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான நலன்களை முன்னிறுத்தும் வகையில் அமைந்தது. மக்களுக்காக எப்போதும் பணியாற்றும் ராமகிருஷ்ண மடத்தின் சமூக சேவைகளில் இது மேலும் ஒரு சிறப்பு அத்தியாயமாக அமைந்தது.
You must be logged in to post a comment.