குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்த மாற்றுத் திறனாளிகள் முடிவு-TARATDAC கூட்டத்தில் தீர்மானம்.!
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடந்த 23.01.2020 அன்று காலையிலும் அதேநாள் மாலை 03.00 மணிக்கு மாவட்டக்குழு கூட்டமும் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் பழனி ஒன்றியம் பழைய ஆயக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். மாநில தலைவர் திருமதி.ஜான்சிராணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
மத்திய பா.ஜ.க அரசால் தற்போது இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு வருகிறது. முத்தலாக் சட்டம், குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது. இது போன்ற சட்டங்களால் இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது. எனவே, இந்திய இறையாண்மையை பாதுகாக்கவும், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி அரசியல் சாசன உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியை வருகிற 25.01.2020 அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு பழனி பேருந்து நிலையம் முன்பாக உள்ள காந்தி சிலை முன்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்டு வருகிற 06.02.2020 அன்றுடன் பத்தாண்டுகள் நிறைவடைகிறது. இந்த பத்து ஆண்டுகளில் சங்கம் பல போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உரிமைகளையும் பெற்றுத்தந்து இருக்கிறது. பல புதிய அரசாணைகள் இயற்றவும் பாடுபட்டு இருக்கிறது. இப்படி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் சங்கத்தின் பத்தாண்டு கொண்டாட்டத்தை திண்டுக்கல் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வருகிற 06.02.2020 மற்றும் 07.02.2020 ஆகிய தினங்களில் பழனி தைப்பூச திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களின் தேவைகளுக்காக நீர்மோர் பந்தல் அமைப்பது என்றும், 09,10,11.02.2020 ஆகிய தினங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் சங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்துவது என்றும், இறுதியாக வருகிற 20.02.2020 அன்று சென்னையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகயை வலியுறுத்தியும் நடைபெறும் திறந்த வெளி கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வருகிற மார்ச் மாதம் சங்கத்தின் சார்பில் பழனி ஒன்றியம், தொப்பம்பட்டி, ஆத்தூர், வடமதுரை, சாணார்பட்டி, ஆகிய ஒன்றியங்களின் சிறப்பு பேரவை கூட்டங்களை நடத்துவது என்றும், அதன் நிறைவாக ஏப்ரல் முதல் வாரத்தில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









